கொழும்பு புறநகரில் இரண்டு ஆண்கள் உட்பட 11 பேர் கைது!

வெலிகட மற்றும் தெஹிவளை பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில்
நடாத்திச் செல்லப்பட்ட இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு இரண்டு ஆண்கள் உட்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தெஹிவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவுடான வீதியில் காணப்படும் பிரபல ஆயுர்வேத நிலையமொன்றுக்குள் சட்டவிரோதமான முறையில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இச்சுற்றிவளைப்பின் போது அதன் முகாமையாளர் உட்பட விபச்சாரத்தில் ஈடுபட தயாராகவிருந்த 4 பெண்கள் கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நால்வரும் அநுராதபுரம், மாத்தளை மற்றும் களுத்துறை பிரதேசங்களைச் சேர்ந்த 33,29,25 மற்றும் 19 வயதுகளையுடையவர்கள் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட நால்வரை நேற்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்ததுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

அதேபோல் வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 2ஆவது ஒழுங்கு நாவல வீதி இராஜகிரிய பகுதியில் பிரபல ஆயுள்வேத நிலையத்திற்குள் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியும் சுற்றிவளைக்கப்பட்டு அதன் முகாமையாளர்களான பெண் மற்றும் ஆணொருவரும், அங்கு ஆயுர்வேத வைத்தியராக செயற்பட்ட மேலும் ஒரு ஆணும், விபச்சாரத்திற்கு தயாராகவிருந்த நான்கு பெண்களும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த விபச்சார விடுதியானது மிகவும் சூட்சுமமான முறையில் நடாத்திச் செல்லப்பட்டுள்ளதோடு, இங்கு நாட்டின் பல தரப்பிலான முக்கியஸ்தர்கள் பலரும் வந்துச் செல்வதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வெலிகட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் நான்காம் இலக்கம் அளுத்கடை நீதவான் நீதிமன்றிலிலிருந்து பெறப்பட்ட பிடியாணையின் அடிப்படையில் வெலிகட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவ்வாறு எழுவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் வல்லவ, நீர்கொழும்பு மற்றும் பொலன்னறுவையைச் சேர்ந்த 34,33,31,20,29,27 மற்றும் 25 வயதுகளையுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த எழுவரையும் நேற்று அளுத்கடை நான்காம் இலக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்ததுடன் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிகட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.