யாழ் விடுதியில் யுவதியும்4இளைஞர்களும் கைது !

யாழ். யுவதியொருவரும், திருகோணமலையை சேர்ந்த குடும்பஸ்தர்களான நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். நகர் பகுதியில் திருகோணமலை பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் சிம் அட்டைகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கோப்பாய் பகுதியை சேர்ந்த யுவதியொருவருக்கும் சிம் அட்டை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிம் அட்டையை விற்பனை செய்த நான்கு இளைஞர்களில் ஒருவர் குறித்த யுவதியை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு காதலிப்பதாக தெரிவித்து கதைத்துள்ளார்.

இவ்வாறு இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தின் பின்னர் அந்த இளைஞர், யுவதியை சந்திப்பதற்கு வருமாறு கூறி அழைத்துள்ள நிலையில் நேற்று முன்தினம் யாழ். நகரில் வைத்து இருவரும் சந்தித்துள்ளனர்.

பின்னர் இருவரும் இணைந்து யாழ். நகரப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு சென்று இருந்த போது, பெண்ணுடன் சென்ற இளைஞனின் நண்பர்கள் மூவரும் மதுபானம் மற்றும் உணவு பார்சல் என்பவற்றை வாங்கிக் கொண்டு விடுதியை நோக்கி சென்றுள்ளனர்.

இதன்போது நகரப் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், இளைஞர்களின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் போதே யுவதி விடுதிக்கு அழைத்து செல்லப்பட்ட விடயம் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. அதன் பிரகாரம், விடுதிக்கு சென்ற யாழ். பொலிஸார் 4 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

அதேவேளை, இளைஞருடன் சென்ற 20 வயதுடைய யுவதி யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது அவர்கள் திருகோணமலையில் திருமணம் முடித்த பிள்ளைகள் உள்ள குடும்பஸ்தர்கள் என தெரியவந்துள்ளது.

இளைஞர்களின் குடும்பத்தினரையும், யுவதியின் பெற்றோரையும் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக அவர்களிடம் விசாரணை செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 4 இளைஞர்கள் மற்றும் யுவதியும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின் அவர்கள் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments

Powered by Blogger.