புனித தலங்களாக பழமை வாய்ந்த ஆலயங்கள் பிரகடனம் செய்யப்பட வேண்டும்!

இந்து மக்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த தலங்களான திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம் மற்றும் திருக்கேதீஸ்வரம் ஆகிய தலங்களை புனித தலங்களாக பிரகடனம் செய்யப்பட வேண்டுமென தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம்,அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சுவாமிநாதனுக்கு அனுப்பிய கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இவ்வாலயங்களை  புனித தலங்களான பிரகடனம் செய்வதற்கு அதற்கான  அமைச்சரவை பத்திரத்தை புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அமைச்சரவையில் தாக்கல் செய்ய வேண்டும். குறித்த விடயத்துக்கு முழு ஒத்துழைப்பினையும் வழங்க  நாம் தயாராகவுள்ளோம்.

மேலும் கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது, சுமார் 400 ஆண்டுக்கால பழமை வாய்ந்து வரலாறு சிறப்புமிக்க  மன்னார் புனித மரியாள் மடு தேவாலய பிரதேசத்தை புனித பிரதேசமாக அறிவிக்க கோரும் அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்திருந்தார். இதனை  நாமும் வரவேற்கின்றோம்.

இதேபோன்று இந்துக்களின் வரலாற்று பழமை வாய்ந்த ஆலயங்களான திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம் மற்றும் திருக்கேதீஸ்வரம் ஆகியவற்றையும் புனித தலங்களாக மாற்ற வேண்டுமென மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகையால் இந்து மத விவகாரம் உங்களை சார்ந்த அமைச்சு என்பதால், இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்” என அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.