ஈ.பி.டி.பியில் ஐக்கியமாகிறார் தவராசா!

வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மீண்டும் ஈ.பி.டி.பியுடன் ஐக்கியமாகி விட்டார் என்ற தகவலை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. அண்மைக்காலமாக நடந்த சமரச முயற்சிகளையடுத்து, தவராசாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள டக்ளஸ் தேவானந்தா பச்சைக்கொடி காண்பித்துள்ளார்.

ஈ.பி.டி.பிக்கு சொந்தமான கொழும்பு வீட்டை விற்கும் விவகாரத்தில் சில வருடங்களின் முன்னர் இரண்டு தரப்பிற்குமிடையில் முரண்பாடு எழுந்திருந்தது. வங்கி கடன் பெறுவதற்காக டக்ளஸ் தேவானந்தா மற்றும் தவராசாவை இணை உரிமையாளர்களாக கொண்ட நிறுவனமொன்றை பதிவுசெய்து, வங்கியில் கடன்பெற்று கட்சிக்கு சொந்தமான வீட்டையே கொள்வனவு செய்ததாக அப்பொது காண்பித்திருந்தனர். கட்சிக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க அப்போது அந்த உத்தியை கையாண்டிருந்தனர்.

பின்னர் அந்த வீட்டை ஈ.பி.டி.பி விற்பனை செய்ய முயன்றபோது, வீட்டை கொள்வனவு செய்ய முயன்ற கொழும்பிலுள்ள தமிழருக்கு சொந்தமான பிரபல்ய கட்டமான நிறுவனத்திற்கு தனது சட்டத்தரணி மூலம் தவராசா கடிதம் அனுப்பியிருந்தார். அந்த வீட்டில் தனக்கும் பங்கிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 50 கோடிக்கும் அதிக பெறுமதியில் ஆரம்பத்தில் வீட்டை கொள்வனவு செய்த அந்த நிறுவனம் தயாராக இருந்தது.

தவராசாவின் திடீர் உரிமைகோரலையடுத்து, விட்டை கொள்வனவு செய்ய முயன்ற கட்டுமான நிறுவனம் திண்டாடியது. காரணம், அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள தொடர்மாடி வீடுகளை பலருக்கு முன்பதிவின் அடிப்படையில் விற்பனை செய்திருந்தது. அந்த நிறுவனத்தின் சட்டத்தரணி, வீட்டின் உரிமையிலுள்ள சிக்கலை கவனிக்காமல் வர்த்தக ஒப்பந்தத்தை முடித்தார் என்ற சிக்கலை எதிர்கொண்டிருந்தார். இதனையடுத்து, அந்த சட்டத்தரணியே சில சமரச முயற்சியில் இறங்கினார்.

ஈ.பி.டி.பியின் சர்வதேச பொறுப்பாளரான கனடாவில் உள்ள மித்திரனுடன் சட்டத்தரணி பேசியதையடுத்து, மித்திரன் இலங்கை வந்து டக்ளஸ் தேவானந்தா மற்றும் தவராசாவிற்கிடையில் வர்த்தக இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தினார். இதன்படி தவராசாவிற்கு சுமார் 4 கோடி ரூபா வரையான இலங்கை பணம் கட்டுமான நிறுவனத்தால் தவணையடிப்படையில் வழங்கப்பட்டது. கொழும்பு வீடும் நிர்ணயிக்கப்பட்ட பெறுமதியை விட, குறைந்த விலைக்கே விற்பனையானது.

கட்சிக்குரிய சொத்தில், முக்கிய சட்டநுணுக்கத்தை பாவித்து தவராசா உரிமை கொண்டாடி பணம் பெற்றார் என்ற அதிருப்தி ஈ.பி.டி.பிக்குள் இருந்தது. இருக்கிறது. இதனால்தான் அவரிடமிருந்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை பறிக்க முயன்றனர். கட்சியிலிருந்தும் ஒதுக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னர் தமிழரசுக்கட்சியுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்தார். எனினும், அதற்கு பலன் கிட்டவில்லை. இந்த மாகாணசபை ஆட்சிக்காலத்தின் பின் அரசியலிலிருந்து ஒதுங்குவதை தவிர வேறுவழியில்லையென்ற நெருக்கடியில் எதிர்க்கட்சி தலைவர் தவராசா இருந்த சமயத்தில், மீண்டும் ஈ.பி.டி.பி சர்வதேச பொறுப்பாளர் மித்திரனின் வடிவில் அதிர்ஸ்டம் அடித்துள்ளது.

கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் விலகி, வலுவான இரண்டாம் நிலை தலைவர்கள் இல்லாமலிருந்த ஈ.பி.டி.பி, உள்ளூராட்சிசபை தேர்தலில் கிடைத்த வாக்கு அதிகரிப்பை பயன்படுத்தி, மாகாணசபைக்காக கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக தவராசாவை மீண்டும் கட்சியில் இணைக்கும் முயற்சியை மித்திரன் ஆரம்பித்தார்.

அண்மையில் கனடாவிலிருந்து இலங்கைக்கு வந்த மித்திரன், கட்சி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இந்த விடயத்தை பேசினார்  அதற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, தவராசாவுடன் மித்திரன் பேசி, அவரது இணக்கப்பாட்டையும் பெற்றுள்ளார். 

No comments

Powered by Blogger.