சீன வெடியில் மாவைக்கந்தன்..!

சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் "வெடிக் கலாசாரம்" இன்று ஆலயங்களுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. சுவாமி திருவீதியுலா வரும்போதும் ஏனைய உற்சவங்களின் போதும் பக்தர்கள் வெடி கொளுத்தி மகிழ்வது சர்வசாதாரண நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது. இதில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலும் அடக்கம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (05.08.2018) மாவைக் கந்தன் ஆலயத்தில் கார்த்திகைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  கந்தன் முத்துத்தண்டிகையில் திருவீதியுலா எழுந்தருளிய போது, சரமாரியாக வெடி கொளுத்தி ஆர்ப்பரித்தனர் பக்தர்கள். அத்துடன், ஆடிச்செவ்வாய் தினமன்றும் (07.08.2018) வெடியோசையால் அதிர்ந்துள்ளது ஆலயச் சூழல். முன்பெல்லாம் கடவுளர் திருவீதியுலா வரும்போது அரோஹரா ஓசை வானளாவிக் கேட்கும். தற்போது, சூழலுக்குத் தீங்கு பயக்கும் வெடியோசைதான் கேட்கிறது. இந்த வெடி கொளுத்தும் கலாசாரம் இந்துப் பண்பாட்டுக்குள் எப்போது நுழைந்தது என்று கேட்கின்றனர் சூழல் மீது அக்கறை கொண்டோர்.
இன்று யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல, உலக நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தொற்றா நோய்களுள் புற்றுநோயும் ஒன்று. இந்த நோய் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. அதில், இந்த வெடியின் நெடியும் ஒன்று.பாமர மக்களுக்கும் இது தெரியும். அவ்வாறிருக்க, இந்த வெடியின் பிடியுள் ஆலயங்கள் ஏன் அகப்படுகின்றன? 
தூபத்தின் நறுமணத்தை நுகரும் மூக்குத் துவாரங்கள், வெடியின் கந்தக நெடியை உள்ளெடுக்கும் பேரவலம் ஆலயங்களுள் அரங்கேறுவது வருத்தமளிக்கிறது. அந்தவகையில், அன்றைய தினம் மாத்திரம் இலட்சக்கணக்கில் பணம் செலவழித்துக் கந்தனுக்கு வெடி கொளுத்தியுள்ளனர் பக்தர்கள்.இதனை ஆலய தர்மகர்த்தா சபையும் நிர்வாகமும் வரவேற்றுள்ளதே? இது போன்ற கைங்கரியங்களுக்குச் செலவழிக்கும் பணத்தை, அறநெறிப் பாடசாலை வளர்ச்சிக்கு அல்லது சமூகத்துக்கு நலம் பயக்கும் ஏனைய செயல்களுக்குப் பயன்படுத்தலாம். அதனை விடுத்து, சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறான செயல்களைச் செய்துகொண்டிருக்கின்றன இன்றைய ஆலயங்கள்.
உள்நாட்டுப் போர்  மௌனித்து இன்று ஒன்பது வருடங்கள் உருண்டோடி விட்டன. அந்தப் போரவலத்தில் எமது தேசம் சுவாசித்த கந்தக வாசனை கொஞ்ச நஞ்சமல்ல. அணுகுண்டுத் தாக்கத்துக்கு உட்பட்ட யப்பானின் ஹிரோசிமா மற்றும் நாகசாகி நகரங்களைப் போன்று அந்தப் புகையின் தாக்கம் இன்றளவும் எமது மக்களில் புற்றுநோயாகவும் மற்றைய நோயாகவும் செல்வாக்குச் செலுத்திக்கொண்டிருக்கிறது. 
ஆலயம் என்பது, ஆன்மாக்கள் லயிக்கும் இடம். அங்கு அமைதி குடிகொண்டிருக்க வேண்டும். அந்த அமைதியான சூழலில் ஆண்டவனுடன் ஒன்றித்து நிற்கும் ஆத்மாக்கள், நல்லெண்ணங்களை வளர்த்துக்கொள்ளும். அவற்றைச் சமூகத்திலும் பிரதிபலிக்கும். ஆனால், இன்று அனைத்துமே தலைகீழாகி விட்டன. மனிதர்களை வளப்படுத்த வேண்டிய ஆலயங்கள் கேளிக்கை இடங்களாக மாறி வருகின்றன. இதற்குள் வெடிக் கலாசாரமும் உள்ளடங்குகின்றது.
இதுமட்டுமல்ல, மந்திர உச்சாடனங்களைக் கூட ஒலிபெருக்கியில் சிதறச் செய்கின்றன இன்றைய ஆலயங்கள். மந்திரம் என்றால், நினைப்பவர்களைக் காப்பது என்று பொருள். அப்படிப்பட்ட புனிதமான மந்திரங்களை ஒலிபெருக்கியில் சிதறடித்து, சாக்கடைகளிலும் கலந்திடச் செய்கின்றனர் ஆலய நிர்வாகத்தினர். இது தவறான செயல். 
இதேபோன்று, ஆலயங்களில் திருவிழாக்கள் இடம்பெறும் சமயங்களில் இசைக்குழு நிகழ்ச்சியை நடத்தி அதில் ஆபாசப் பாடல்களைப் பாடுகின்றனர். பிள்ளையார் வணக்கப் பாடல் மட்டுமே அதில் பக்திப் பாடலாக இருக்கும். ஏனைய பாடல்கள் முழுவதும் துள்ளிசையும் ஆபாசமுமாகத்தான் இருக்கும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஆலய வளாகங்களிலும் சமூகத்திலும் கலாசாரச் சீர்கேடுகள் இடம்பெற வழிவகுக்கின்றன. அதுமட்டுமல்லாது, அங்கு குழுமும் இரசிகர்கள் வெடி கொளுத்தி இசைக்குழுவினரை உற்சாகப்படுத்துகின்றனர். இந்த அவலங்கள் வேரூன்றுவதைக் கண்டுகொள்ளாது இருக்கின்றன இந்துமத அமைப்புக்கள்.
சா வீடுகளில் கேட்ட வெடியோசைகள் இன்று  மங்கல நிகழ்வுகளிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. தேர்தல் வெற்றி, பரீட்சை வெற்றி, விருந்தினர் வரவேற்பு என அடுக்கடுக்காய் நுழைந்த வெடி, ஆலயங்களுக்குள்ளும் இடிக்கிறது. சாவின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னப்படும் பூமி, அதிவலியால் துடிக்கிறது.
எப்படியெல்லாம் பூமியை அழிக்க முடியுமோ அப்படியெல்லாம் அதனை அழித்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் தினத்தினை அனுட்டிப்பது வேடிக்கையாக இருக்கிறது. தமக்கான அழிவுப் பாதையை நோக்கி அவர்கள் பயணிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இவை அனைத்துக்கும் காரணம், வெளிநாட்டுப் பணமே. ஹலோ என்றதும் கிலோக் கணக்கில் வரும் பணத்தை எப்படிச் செலவழிப்பது என்று தெரியாது இருக்கின்றனர் இன்றைய தலைமுறையினர். ஆலயங்களும் அவ்வாறே இருக்கின்றன. இவர்களுக்கு எங்கே தெரியப்போகின்றது பசித்தவர் முகங்கள்? இவர்களுக்கு எங்கே தெரியப்போகின்றது இயற்கைச் சீற்றங்கள்? எம்மோடு தோன்றி எம்மோடு மட்டும் முடிந்து போவதல்ல இந்தப் பூமி என்பதனை இவர்கள் உணரவேண்டும். அல்லவைகளைத் தவிர்த்து நல்லவைகளை அடுத்த தலைமுறைக்குக் கையளித்துச் செல்ல வேண்டும். மொத்தத்தில், இவர்கள் தமது மனப்பாங்குகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்துப் பண்பாட்டுப் பேணுகையாளர்கள், சூழல் அக்கறையாளர்கள் இந்த வெடி அனர்த்தத்தை முளையிலேயே கிள்ளி விடுவதற்கு முன்வர வேண்டும். இவ்வாறு வீண்விரயம் செய்யப்படும் நிதியை நற்செயல்களுக்குப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், எம்மோடு தோன்றி எம்மோடு மட்டும் முடிந்து போவதல்ல இந்தப் பூமி.



வெடியின் நெடியுள்
மாவைக் கந்தன்

எஸ். மல்லிகா 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.