ஆஸ்திரேலியாவுடன் தமிழக சுகாதாரத் துறை ஒப்பந்தம்!

விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம் குறித்து ஆஸ்திரேலிய விக்டோரியா மாநிலத்துடன் தமிழ்நாடு சுகாதாரத் துறை இன்று (ஆகஸ்ட் 22) ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம்
டெல்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனை மற்றும் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மருத்துவமனையின் நடைமுறைகளைப் பின்பற்றி, தற்போது தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்டுவருகிறது.
இத்திட்டம் சுகாதாரத் துறை மூலம் கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்பட்டுவருகிறது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை(TAEI) திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, தாம்பரம் அரசுமருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிய 5 மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம் செயல்பட்டுவருகிறது. கடந்த ஜனவரி மாதம், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 29 படுக்கை வசதிகளுடன் கூடிய விபத்து காய மற்றும் அவசரகால சிகிச்சை மையம் திறக்கப்பட்டிருந்தது.
திட்டத்தை விரிவுபடுத்த ஆலோசனை கூட்டம்
விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்துவது குறித்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆஸ்திரேலியாவின் தேசிய விபத்து ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் மார்க் பிட்ஜெரால்டுடன் சென்னையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர், "தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை இன்னும் 3 ஆண்டுகளில் ஏற்படுத்தத் திட்டமிட வேண்டும். இதனால் உயிரிழப்புகள் குறையும். இத்திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக அமையும்" என்று மார்க் பிட்ஜெரால்டுடன் தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலியா பயணம்
இதனைத் தொடர்ந்து, இத்திட்டம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜில் ஹென்னசி, ஆஸ்திரேலியா விபத்து காய சிகிச்சை துறை மருத்துவக் குழுவினர் ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்பேரில், கடந்த 18ஆம் தேதியன்று, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ பணிகள் மேலாண்மை இயக்குனர் உமாநாத் ஐஏஎஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழு ஆஸ்திரேலியாவிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ளது. பின்னர், இவர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய விக்டோரியா மாநில நாடாளுமன்றத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கவுரவிக்கப்பட்டனர்.
ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்ன் நகரில் உள்ள உலகப் புகழ் பெற்ற அல்ப்ரெட் மருத்துவமனையின் அதி நவீன விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவையும், ஆம்புலன்ஸ் சேவையையும் நேற்று தமிழக சுகாதாரக் குழுவினர் பார்வையிட்டனர்.
ஒப்பந்தம் கையெழுத்து
இதைதொடர்ந்து, விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தை மேலும் விரிவுபடுத்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டார். அதன்படி விபத்து சிகிச்சைகளுக்கான அமைப்புகளை ஏற்படுத்துதல், மாநில அளவிலான விபத்து பதிவேடுகளை பராமரித்தல், விபத்து சிகிச்சைகளின் தரம் உயர்த்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்திட்ட வீடியோவை அமைச்சர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர்
"தமிழக சுகாதாரத் துறையானது இந்திய அளவில் முதன்மையாக விளங்கி வருகிறது. விபத்துக்கள் மற்றும் பல்வேறு அவசரகால நிகழ்வுகளினால் ஏற்படக்கூடிய இறப்பினை கட்டுப்படுத்துவது இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், விக்டோரியா மாநில அரசுடனான நல்லுறவை மேம்படுத்துவதாகவும் அமைகிறது.
உலகப் புகழ்பெற்ற ஆல்பிரட் மருத்துவமனையின் விபத்து காய சிகிச்சை ஆராய்ச்சி மையம் மற்றும் மறுவாழ்வு மையம் போன்றவைகளின் ஆய்வுகள் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தமிழகத்தில் விபத்து காய சிகிச்சைகளை உலகத் தரத்திற்கு இணையாக மேம்படுத்துவதற்கு இந்தப் பயணம் உறுதுணையாக அமையும் என நம்புகின்றோம்.
குறிப்பாகச் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விக்டோரியா மாநில அரசுடன் இணைந்து, விபத்து மற்றம் அவசர சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 6 மாதத்தில், விபத்தினால் ஏற்படக்கூடிய இறப்புகள் 8.3 சதவீதத்தில் இருந்து 5.6 சதவீதமாகக் குறைத்துள்ளது என்பது இத்திட்டத்தின் வெற்றியாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.