முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்!

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் 60 வருடங்களாக திரைத்துறையில் பல படங்களில்
நடித்துள்ளார். ஆனால், இதுவரை தமிழ் படத்தில் நடித்ததில்லை. தற்போது முதல் முறையாக நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு ‘உயர்ந்த மனிதன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் இவருடன் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தமிழ், மற்றும் இந்தியில் படமாக்க இருக்கிறார்கள். 
கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இந்த படத்தை இயக்குகிறார். மார்ச் 2019ல் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. 
உயர்ந்த மனிதன் படம் குறித்து தமிழ்வாணன் கூறும்போது, ‘எனது கனவு நிறைவேறியது. இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்று விட முடியும். உலகெங்கும் புகழ் பெற்று, இந்திய திரை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் அமிதாப் சாருடன் பணி புரிவது மிக பெரிய பாக்கியம். தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் என் இயக்கத்தில் தான் என்பதே எனக்கு மிக பெரிய பெருமை’ என்றார்.
"ஒரு துணை இயக்குனராக திரை உலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து  நடிப்பது தான் எனக்கு கிடைத்த மிக பெரிய வரம்" என்கிறார் எஸ்.ஜே.சூர்யா. 

No comments

Powered by Blogger.