மாணவி அனிதா இறந்து ஓராண்டாகியும் நீட் தேர்வுக்கான தளராத விதிமுறைகள்!

மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காததால் மாணவி அனிதா இறந்து ஓராண்டாகியும் நீட் தேர்வுக்கான விதிமுறைகள் தளர்த்தப்படாமல் மேலும் கடுமையாகியுள்ளன. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்தபோதிலும் நீட் தேர்வில் தகுதி பெறவில்லை.  இதனால் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காத விரக்தியில் கடந்த ஆண்டு இதே நாளில் தான் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அப்போது அனிதாவின் மரணம் தமிழ்நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அனிதா மரணத்தை அடுத்து  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தன. ஆனாலும் நீட்தேர்வு இன்னும் ரத்து செய்யப்படவில்லை. இப்படி எதிர்ப்பு குரல் ஒழித்துக் கொண்டிருக்க நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. அந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழ்நாட்டில் தேர்வு எழுத இடம் கிடைக்கவில்லை.

மாணவர்கள் பலர் கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று தான் தேர்வு எழுத நேரிட்டது. வெளிமாநிலத்தில் தேர்வு எழுத சென்ற அதிர்ச்சி முடிவதற்குள் மற்றொரு அதிர்ச்சி ஏற்பட்டது. தமிழில் கேட்கப்பட்ட வினாத்தாளில் மொழிப்பெயர்ப்பு குளறுபடிகள் இடம் பெற்றன. இதனால் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பலரால் சரியாக விடை எழுத முடியவில்லை.

இதையடுத்து மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை இரு தினங்களுக்கு முன்பு தான் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இப்படி மாணவி அனிதா மரணத்துக்கு பிறகும் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டின் கோரிக்கை மறுக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி மாறாக விதிமுறைகள் மேலும் இறுகதான் செய்யப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.