போதை...!

வயதின்றி படர்ந்து பற்றி
வரிகள் பழகவிடாது-பல
வம்புகள் செய்யத் தூண்டி
வரம்பின்றி நடக்கச் செய்து
வலிகள் பல தந்திடும்
வன்மம் தான் போதை.

வல்லமைகளை பறித்தும்
வலிமைகளை பொய்யாக்கி
வடிவம் இழக்குமாறு உடலில்
வரட்சி ஏற்படுத்தி-எம்மை
வல்லாதிக்கம் செய்து
வரலாற்றை புரட்டுவது போதை.

அன்பை காமமென காட்டி
அதனால் இனியோரை பிரித்து
அவமானப்பட வைத்து-மனதில்
அம்புகள் பாய்ச்சி-உன்னை
அசிங்கமான உயிரியாக
அடையாளப்படுத்துவதும் இந்தப் போதை.

நன் மங்கையர் கனல்க்
கற்பில் நீருற்றி அணைத்து
அவர்தம் மானத்தை பிடுங்கி
ஆத்மாவை அலையச் செய்வதும்
இந்தப் போதை தான்.

நாளொரு பிரச்சினை வாங்கி
வாளொடு கத்தி வீசி
குருதியில் முடிவு காண
குரூரம் பல செய்து
குற்றமற்றவனை மரிக்கச் செய்வதும்
கொடிய போதையின் வேலை.

போதை சதையில் ஊடுருவி
உதிரத்தில் கலந்து நரம்பேறி
பேதையென உனை மாற்றி
சமூகத்தை தூரமாக்கும்
உறவுகளை பாரமாக்கும்
இனியதையும் காரமாக்கும்.

சத்ரு தாக்கும் வேளைகளில்
உன்னை காக்க வழியின்றி
வரண்ட நாக்கு அறுந்திட
கத்தினாலும் ஆக்கிய ஈருடல்
"எம் பாக்கியம் இவன் அழிக!"
என்றே ஏக்கத்தோடு கலங்கும்.

வாவென்றால் உடனே கிடைக்கும்
தாவென்றால் கற்பனைகள் தரும்
செய் என்றால் கொலையும் செய்யும்
போவென்றால் போகாதே இந்தப் போதை.
மறந்துவிடு அன்றேல் இறந்து விடு.
மறுத்தாலும் காலனாகும் போதை.

***மோகனன்***
Powered by Blogger.