முட்டுச் சந்தில் முப்பெரும் விழாவா?

வருடா வருடம் திமுக வின்
அண்ணா,பெரியார், கலைஞர் விருதுகள் வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா செப்டம்பர் 15ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுவதுண்டு. சில வருடங்கள் தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்திலேயே நடந்த விழா கடந்த வருடம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்தது.
அம்மாவட்டத்தைச் சேர்ந்தவரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமியின் ஈடுபாடான ஏற்பாட்டில் பிரமாண்டமான மைதானத்தில் முப்பெரும் விழா நடந்தது. இந்த வருடம் கலைஞர் காலமாகி, புதிய தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 15 முப்பெரும் விழா எப்படி, எங்கே நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தோடு மோதிய விழுப்புரம்!
ஸ்டாலின் தலைவரான பிறகு தலைமைக் கழகம் சார்பில் நடக்கும் முக்கியமான விழா என்பதால் முப்பெரும் விழாவை நாங்கள் நடத்துகிறோம் என்று பல மாவட்டச் செயலாளர்கள் போட்டி போட்டனர். ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே இந்த போட்டி. ஆனால் இந்த வருடம் சென்னையிலோ சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டத்திலோ நடத்தலாம் என்று தலைமையில் முடிவெடுக்கப்பட்டது.
முப்பெரும் விழாவின் கடைசி ரேஸில் காஞ்சிபுரம் மாவட்டமும், விழுப்புரம் மாவட்டமும் இருந்தன. அதிலும் கடைசியில் ஜாக்பாட் அடித்தது விழுப்புரத்துக்கு. இதற்கு ஒரு காரணம் உண்டு.
ஸ்டாலின் கழகப் பொருளாளர் ஆவதற்கு முன்னாலேயே இளைஞரணிச் செயலாளராக இருந்தபோதே ஒரு மாநில மாநாட்டுக்குத் தலைமை ஏற்று கொடியேற்றினார் என்றால் அது விழுப்புரத்தில் நடந்த மாநாட்டுக்குத்தான். எனவே, ‘நீங்கள் விழுப்புரத்தில் மாநாடு நடத்துவதுதான் சிறந்ததாக இருக்கும்’ என்று சிலர் சொல்ல கடைசியில் விழுப்புரத்தை டிக் செய்தார் ஸ்டாலின். ஈரோடு மதிமுக மாநாட்டுக்கு துரைமுருகனை அனுப்பிவிட்டு விழுப்புரம் மாநாட்டுக்கு செல்ல முடிவெடுத்தார்.
எப்படி செலக்ட் செய்தார் பொன்முடி?
முப்பெரும் விழாவை நடத்த வாய்ப்பு கிடைத்ததை ஒட்டி விழுப்புரம் மாவட்ட திமுகவினர் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் முப்பெரும் விழாவுக்காக விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொன்முடி தேர்ந்தெடுத்த இடம்தான் பலருக்கும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
இதுபற்றி விழுப்புரம் நகர திமுகவினர் நம்மிடம் பேசினார்கள்.
“தளபதி பல ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டத்தில் மாநாட்டுத் தலைமை ஏற்றார். அந்த இடம் சென்னை-திருச்சி பைபாஸ் ரோட்டில் இருக்கிறது. இன்னும் காலியாகவே இருக்கிறது அந்த மைதானம். ஆனால் அங்கே நடத்தாமல் விழுப்புரம் டவுனில் ரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் இருக்கும் நகராட்சி மைதானத்தை தெரிவு செய்திருக்கிறார் பொன்முடி. விழுப்புரம் நகரம் நாளுக்கு நாள் நெரிசல் ஆகிக் கொண்டே இருக்கிறது. விழுப்புரம் நகரத்தின் சாக்கடை இந்த மைதானத்தின் வழியாகத்தான் செல்கிறது. இதே மைதானம் சில ஆண்டுகளுக்கு முன் என்றால் கொஞ்சம் வசதியாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இந்த மைதானத்தை ஒட்டி இருக்கும் ரயில்வே மைதானத்தை தனியாகப் பிரிக்கும் வகையில், ரயில்வே காம்பவுன்ட் சுவர் எழுப்பிவிட்டது. எனவே பழைய அளவுக்கு இப்போது இல்லை.
முட்டுச் சந்தில் முப்பெரும் விழாவா?
முப்பெரும் விழா என்றால் தலைமைக் கழகம் நடத்தும் விழா. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் என்று நிர்வாகிகளுடைய வாகனம்... பல பகுதிகளில் இருந்து வருகிற தொண்டர்களின் வாகனங்கள் என்று ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரும்.
இந்த நிலையில் நகராட்சி மைதானமோ மூன்று பக்கம் அடைபட்டு ஒரே ஒரு நுழைவாயில்தான் பெற்றிருக்கிறது. காந்தி சிலை ஒட்டி பழைய கோர்ட் வழியாக இருக்கும் பாதைதான் நகராட்சி மைதானத்துக்கு பிரதான நுழைவாயில். இதைத் தவிர விழுப்புரம் ரயிலடியை ஒட்டி ஒரு குறுகலான பாதை இருக்கிறது. ஆக இப்படிப்பட்ட நெருக்கடியான ஒரு இடத்தில்தான் நடக்கப் போகிறது முப்பெரும் விழா. போன வருடம் திண்டுக்கல்லில் 100 ஏக்கர் பரப்பில் முப்பெரும் விழா நடந்தது. அதை ஒப்பிடும்போது இந்த வருடம் முட்டுச் சந்தில்தான் நடக்கப் போகிறது முப்பெரும் விழா.
தளபதி தலைவரான பிறகு விருப்பப்பட்டு விழுப்புரத்துக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறார். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா? இந்த இடத்தை பொன்முடி ஏன் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை குறைவான தொண்டர்கள் வந்தால் கூட கடுமையான நெரிசல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி கூட்டம் அதிகம் என்று காட்டுவதற்காகவா என்பதும் தெரியவில்லை” என்றனர்.
பாடாய்ப் படுத்தும் பார்க்கிங்!
மேலும் அவர்கள், ”விழுப்புரம் நகரத்தை உள்ளடக்கிய தொகுதி இப்போது அமைச்சர் சிவி சண்முகத்திடம் உள்ளது. அதனால் அவர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடைஞ்சல்களை செய்வார். ஏற்கனவே விழுப்புரம் கே.கே. ரோடு எனப்படும் கன்னியாகுளம் ரோட்டில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்தக் கூடாது என்று வணிகர் சங்கத்தினர் உச்ச நீதிமன்றம் வரை சென்று உத்தரவு வாங்கி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் முப்பெரும் விழா அன்று விழுப்புரம் நகரம் திமுகவினரின் வாகனங்களால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பைபாசிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு வருமாறு போக்குவரத்துப் போலீஸார் மூலம் நெருக்கடி கொடுக்க தயாராகிறது அதிமுக அரசு. அதாவது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள் திண்டிவனம் அருகே உள்ள அண்ணாமலை ஓட்டல் அருகே வாகனங்களை நிறுத்திவிட்டு சில கிலோமீட்டர் நடந்துதான் முப்பெரும் விழா நடக்கும் நகராட்சி மைதானத்துக்கு வரவேண்டும் என்றும், தஞ்சை, நாகை மற்றும் தென் மாவட்டங்கள், திருச்சி வழியாக வருகிறவர்கள் எல்லாம் போக்குவரத்துக் கழக ஊழியர் குடியிருப்பு அருகே பார்க்கிங் செய்துவிட்டு சில கிலோ மீட்டர்கள் நடந்துவரவேண்டும் என்று உத்தரவிட போக்குவரத்து போலீஸார் ஆலோசித்து வருகிறார்கள்.
இதனால் பாடாய்ப் படப் போகிறவர்கள் தலைவரை முப்பெரும் விழாவில் காண ஆவலாக வரப் போகிற உடன்பிறப்புகள்தான்” என்று முடித்தனர் விழுப்புரம் திமுகவினர்.
ஊராட்சி செயலாளருக்கு 2ஆயிரம்!
மேலும் முப்பெரும் விழாவை முன்னிட்டு விழுப்புரம் முழுவதும் உள்ள கட்சியின் ஊராட்சி செயலாளர்களிடம் தலா 2 ஆயிரம் ரூபாய் தரச் சொல்லியிருக்கிறார் பொன்முடி என்றும் புகார்கள் பரவுகின்றன.
“மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் ஏழு தொகுதிகள் திமுக வசம் உள்ளன. ஏழு எம்.எல்.ஏ.க்களும் தலா ஐந்து லட்சம் கொடுக்க வேண்டுமாம். அப்புறம் ஒன்றிய செயலாளர்கள் வசூல் தனி. இப்படி கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டம் முழுதும் பொன் முடி நிதி சேகரிப்பில் இறங்கியுள்ளார்.
7ஆம் தேதி திருக்கோவிலூர் தொகுதியில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் பல தொண்டர்கள் இரு நூறு ரூபாய், ஐநூறு ரூபாய் என்று கவரில் போட்டு பொன்முடியிடம் கொடுத்தர்கள். சிலர் ஆர்வமாய் கொடுத்தாலும் பலர் வாடி வதங்கிதான் அதைக் கொடுத்தனர்” என்கிறார்கள் திமுக நகர நிர்வாகிகள் சிலரே.
முதல்வர் ஆவதற்கான ஆயத்த மாநாடு!
விழுப்புரம் மத்திய மாவட்டம் திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் நகர செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பொன்முடி,
“விழுப்புரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவை கழகத்தலைவர் தளபதி அவர்களை முதல்வராக்கும் ஆயத்த மாநாடு போல் அமைய வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார். ஆனால் அதற்கு ஏற்ற இடவசதி கொண்டதாக அமையுமா என்பதுதான் தொண்டர்களின் சந்தேகம்.
இது பற்றியெல்லாம் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியுடன் பேச முயன்றும், அவர் முப்பெரும் விழாவில் பிசியாக இருப்பதால் பேச முடியவில்லை.
அவரது ஆதரவாளர்களிடம் பேசியபோது, “தலைமை இட்ட உத்தரவை பின்பற்றிவருகிறார் பொன் முடி. கலைஞர் மறைவு காரணமாக முப்பெரும் விழா நடக்குமா, தள்ளிப் போகுமா என்ற நிலைமையில் தளபதி தலைவராக பொறுப்பேற்றதும் திடீரென திட்டமிடப்பட்ட நிகழ்வு இது. எனவே இடத் தேர்வு நகரத்துக்குள் அமைந்தது. முப்பெரும் விழாவுக்கு போதுமான வசதிகள் செய்யப்படும். யாரையும் கட்டாயப்படுத்தி வசூல் நடக்கவில்லை. விழாவுக்காக கட்சியினர் தாமாக நிதி கொடுக்கின்றனர்” என்றனர்.
முப்பெரும் விழாவுக்கு முன்பே இப்படி என்றால் முடிந்தபிறகு என்னென்ன புகார்கள் கிளம்பப் போகிறதோ?
ஆரா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.