இசைவாணன்..!



இலட்சியவானில் பறவைகளாய்ச்
சிறகைவிரித்துப் பறப்பதற்காய் -தாய்
நிலத்தில் வீரப்பாசறையில் விதை
முளைத்த நட்பே இசைவாணா!

நிலைத்திருக்கும் வாழ்வென்று
நினைத்து நாமும் கூடவில்லை எம்மில்
முளைத்தநட்பில் முழு உறவின்
முகங்கள் நாமும் கண்டோமே!

களைப்பு எதுவும் தெரியாது
களத்தில் நிற்பதும் புரியாது
சிரித்துச்சிரித்துக் கதைபேசும் உன்
சேட்டை நட்பில் இனிமை கண்டோம்..

களத்தில் ஒருமுறை காயமுடன்
நிலத்தில் வீழ்ந்த என்னுடலை
இழுத்துவந்து கரைசேர்த்த உன்
மறத்தில் மீண்டதென் உயிர்மூச்சு...

ஆறுயிர் நண்பனே இசைவாணா!
என்னைக் காத்து நீ சேர்த்து மீண்ட
எந்தன் உயிர்மூச்சை
இழுத்துப்பிடித்து வாழ்ந்தபடி
விடுதலை வேண்டும் வார்த்தைகளால்,
கண்ணில் வடியும் நீர்துடைத்து நானோ
கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்,
நீயோ காவியமாகிவிட்டாய்....
 -காந்தள்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.