தேர்தலுக்கு முன் வெளியாகும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை!

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் இன்று ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த ராமலிங்கம் ஐ.ஏ.எஸ். ஆஜராகி வாக்குமூலம் அளித்திருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இவர்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த சமயத்தில், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வெளியான ஜெயலலிதா உடல்நிலை குறித்த அறிக்கைகளில் எல்லாம் கையெழுத்திட்டு இருந்தவர். அந்த சமயத்தில் வெளியான மருத்துவ அறிக்கைக்கும், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு கொடுக்கப்பட்ட டிஸ்சார்ஜ் சம்மரியும் முரண்பாடாக இருக்கிறது என சில கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டு இருக்கிறது. அதற்கு, சுப்பையா விஸ்வநாதன் சில தகவல்களை சொல்லியிருக்கிறார். அத்துடன், ‘மருத்துமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கைகள் எல்லாமே தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அனுமதி வாங்கி, அவர்கள் மூலமாகவே வெளியிட்டோம்.’ எனவும் சொன்னாராம்.
அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்யவே இன்று ஜெயலலிதாவின் தனிச் செயலாளர் ராமலிங்கம் அழைக்கப்பட்டிருக்கிறார். அவரிடம் இது சம்பந்தமாக பேசியபோது, ‘அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மேடத்தின் மருத்துவ அறிக்கைகள் எல்லாம் செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு அப்பல்லோவில் இருந்து அனுப்புவார்கள். அரசு சார்பாகத்தான் அந்த அறிக்கையை வெளியிடுவோம்.’ என அவர் சொல்ல... ‘மருத்துவமனை கொடுத்த அறிக்கைகளை நீங்கள் வெளியிட்டீர்களா, இல்லை நீங்கள் சொல்வதை அறிக்கையாக கொடுக்கச் சொல்லி அதை வெளியிட்டீர்களா’ என கேட்கப்பட்டதாம். அதற்கு ராமலிங்கமோ, ‘அப்படியெல்லாம் நாங்கள் எதையும் கொடுக்கச் சொல்லி மருத்துவமனையில் கேட்கவில்லை. ஜெயலலிதா முதல்வர் என்பதால் எல்லா அறிக்கைகளும் அரசு மூலமாகவே வெளியிட வேண்டும் என்பதால்தான் நாங்கள் வாங்கி வெளியிட்டோம்..’ எனச் சொன்னாராம்.
‘வெளியான அறிக்கைக்கும் சசிகலாவுக்கும் எதுவும் சம்பந்தம் உண்டா? அவர் சொல்லி எதுவும் அறிக்கை வெளியிட்டீர்களா?’ என்ற கேள்விக்கு, ‘நாங்கள் யாரும் சசிகலாவுடன் தொடர்பில் இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த சமயத்தில் டாக்டர்கள் மூலம் கொடுக்கப்பட்ட அறிக்கையை மட்டுமே நாங்கள் வெளியிட்டோம். டாக்டர்கள் யார் சொல்லி அறிக்கையை கொடுத்தார்கள் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. அது குறித்தெல்லாம் நாங்கள் புலனாய்வு செய்யவில்லை’ எனவும் சொன்னாராம். அது அத்தனையும் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளப்பட்டதாம். “ என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதற்கு லைக் போட்ட ஃபேஸ்புக், தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் டைப்பிங் செய்ய ஆரம்பித்தது. “ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கேட்கப்படும் கேள்விகள் எல்லாமே சசிகலாவை குற்றவாளியாக வெளிக்காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே கேட்கப்படுவதாக ஆதங்கத்தில் இருக்கிறாராம் டிடிவி தினகரன்.
’ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான எல்லோரிடமும் அவர்கள் கேட்கும் கேள்வி என்பது சசிகலாவை நோக்கியே இருக்கிறது. சசிகலாதான் எல்லாத்துக்கும் காரணம் என சொல்ல வைத்துவிட வேண்டும் என்பது போலவே கேட்கிறார்கள். எதாவது ஒரு வகையில் அம்மாவின் மரணத்துக்கு காரணம் சின்னம்மாதான் என்பதை சொல்லிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் விசாரணை ஆணையம் செயல்படுகிறது. இந்த விசாரணை ஆணையத்தின் முடிவு என்பதும் அப்படித்தான் இருக்கும். எடப்பாடியும் பன்னீரும் என்ன நினைக்கிறார்களோ அதை செய்யும் ஆணையமாகத்தான் விசாரணை ஆணையம் இருக்கும். அதை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. விசாரணை ஆணையத்தின் முழுமையான அறிக்கை வரும் போது அது நிச்சயம் நமக்கு பாதகமாகத்தான் இருக்கும்...’ என சொல்லி வருகிறாராம் டிடிவி தினகரன்.
அதற்குத் தகுந்தாற்போல இன்னும் சில விஷயங்களையும் சொல்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு தேதி அறிவிக்கும் சில தினங்களுக்கு முன்பாக விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளியாகும். அந்த அறிக்கையானது சசிகலா குடும்பத்துக்கு எதிரானதாக இருக்கும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அப்படி ஒரு அறிக்கை வெளியானால் அது அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும். தேர்தலில், ‘அம்மாவின் மரணத்துக்குக் காரணமான சசிகலா குடும்பத்துக்கு வாக்களிக்கலாமா?’ என்பதையே எடப்பாடி டீம் பிரசாரத்துக்குப் பிரதானமாகப் பயன்படுத்தும்.
அந்த வார்த்தைகள் நிச்சயமாக மக்களிடம் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தும் அதை எப்படி சமாளிப்பது என்பதுதான் இப்போது தினகரன் வகையறாக்களின் கவலையாக இருக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்களில் சிலவற்றை அந்த நேரத்தில் வெளியிடலாம் எனவும் சிலர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முடிவு தேர்தல் நேரத்தில் வந்துவிட்டால் என்ன ஆகும் என்பதே இப்போது தினகரனின் திடீர் கவலையாக மாறியிருக்கிறது. “ என்ற ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.