தமிழ்க் கையெழுத்துத் திருவிழா கனடாவில்!

என் அன்பிற்கினிய தமிழ் நெஞ்சங்களே
உங்கள் அனைவருக்கும்
என் அன்புவளர் நட்பு வணக்கம்

சகாயம் அவர்களைத்
தெரியாதோர் இருப்பதரிது

சகாயம் என்றால் நேர்மை
நேர்மை என்றால் சகாயம் என்று
தமிழ் அகராதிகள் ஏற்றுக்கொண்டுவிட்டன

எத்தனை இன்னல்கள் வந்து
எதிர்த்து நின்றாலும்
விடாப்பிடியாய் அவர் தன்
நேர்மையோடு மட்டுமே ஒட்டிக்கிடப்பது
என்னை வெகுவாகக் கவர்ந்த
அவரின் அறம் போற்றும் ஆண்மை

மக்கள் பாதை
என்று ஓர் இயக்கத்தை
ஆர்வளர்கள் பலர் ஒன்றுகூடி
அவரின் வழிகாட்டுதலில் உருவாக்கி
அதன் செயல்பாடுகளில் ஒன்றாக
தமிழ்க் கையெழுத்துத் திருவிழா ஒன்றை
சென்னையில் அக்டோபர் இரண்டில் நடத்துகிறார்கள்

அந்தக் கையெழுத்துத் திருவிழாவை
உங்கள் அனைவரின் ஆதரவோடும்
கனடாவில் நிறைவேற்றும் பணியை
நான் மகிழ்வோடு ஏற்றுள்ளேன்

நாம் செய்ய வேண்டியதெல்லாம்
ஒரு சிறு காரியம்தான்

படிவம் ஒன்றினை நான்
அச்செடுத்துக் கொண்டுவருவேன்

அதில் உங்கள் பெயரைத் தமிழில் எழுதி
தமிழிலேயே கையொப்பமும் இட்டுவிட்டால்
நம் பணி சிறப்பாக நிறைவடைந்துவிடும்

அப்படிக் கனடாவிலும்
தமிழுணர்வோடு
தமிழர்களாய் ஒன்றிணைந்து
தமிழ்க் கையொப்பம் இடுவதை
ஒரு காணொளியாக எடுப்போம்
மக்கள் பாதைக்கு அனுப்பி வைப்போம்

வரும் சனிக்கிழமை
2018, 29 செப்டம்பர் மாலை
6:30 மணிக்கு
186 Staines Road, Scarborough விலுள்ள
என் இல்லத்தில் நிகழும்
தமிழ்க் கையெழுத்துத் திருவிழாவில்
கனடாவாழ் அன்புத் தமிழர்கள் அனைவரும்
அன்புடன் கலந்துகொண்டு சிறப்பிக்க
உங்கள் அனைவரையும்
பேரன்புடன் வரவேற்கிறேன்

நன்றி

*
அழைப்பது
நானல்ல
அன்னைத்தமிழ்

வரப்போவது
நீங்களல்ல
உங்கள்
தாய்த்தமிழ் உணர்வு

தரப்போவது
வெறும் கையெழுத்தல்ல
தாய்நில மக்களின்
தலையெழுத்தை மாற்றும்
பொன்னெழுத்த

*
தலைவன் தலைவி
தவப்பிள்ளைகள் என்று
அனைவரும் வருக
அமுதத் தமிழுக்கு
உங்கள்
கையெழுத்து முத்தம்
தருக

*

உங்களின்
பத்து நிமிடங்கள் போதும்
பொங்கு தமிழின்
கையொப்பத் திருவிழா வெற்றிக்கு

அந்தப் பத்து நிமிடங்களோ
தமிழர் வாழ்வை மீட்டுத்தரும்
தங்கப் பொழுதுகளாய் உருவெடுக்கும்
வரும்நாட்களில்

*
தமிழனுக்கு என்று ஒரு
தனி நாடு இல்லைதான்
ஆயினும்
அவன் காலூன்றும் ஒவ்வொருநாடும்
தமிழின் நாடாய் பரந்து விரிவதை
மெய்சிலிரிக்கக் காண்கிறோம்

யாதும் ஊரே
யாவரும் கேளிர்

வேறெவன் சொன்னான்
தமிழனே வென்றான்!

(குறுங்கால அழைப்பினைத் தொடுப்பதற்காக
என்னை அருள்கூர்ந்து மன்னிக்கவும்)

அன்புடன் புகாரி
416-500-0972 

No comments

Powered by Blogger.