முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டுள்ள கவலை!

யுத்த சூழ்நிலையில் கூட மிக ஒழுக்கமாகத் தமது கல்வி நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்திய இளைஞர்களும் யுவதிகளும் யுத்த சூழ்நிலைகள் முடிவுக்குக்கொண்டு வரப்பட்ட பின்னர் ஒழுக்கக்குறைவு உள்ளவர்களாக மாறிவிட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“இன்று இளைஞர் யுவதிகளிடையே காணப்படும் குழப்ப நிலைகளுக்கும் தவறான பழக்கவழக்கங்களிற்கும் மூல காரணமாக அமையக் கூடியவிடயங்கள் எம்மால் ஆராயப்பட வேண்டும்.

ஆனால் இவற்றை ஒருநிறுவனமோ எம்மைப் போன்ற முதியவர்களோ ஆராய்வதைவிட இளைஞர்களுக்கான தேவைகளையும் அவர்களின் பிரச்சினைகளையும் இளைஞர் யுவதிகள் ஊடாகவே அறிந்துகொண்டு அவர்கள் மூலமாகவே அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முயல்வது உசிதம் எனக் கருதுகின்றேன்.

யுத்த சூழ்நிலையில் கூட மிகஒழுக்கமாகத் தமது கல்வி நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்திய இளைஞர்களும் யுவதிகளும் யுத்த சூழ்நிலைகள் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டு அமைதிநிலை உருவாக்கப்பட்ட பின்னர் ஒழுக்கக்குறைவு உள்ளவர்களாக மாறியுள்ளனர்.

வீதிச்சண்டை, வாள்வெட்டு, மதுபோதை, போதைவஸ்துப் பாவனை என சமூக நலன்களுக்கு ஒவ்வாத பழக்கவழக்கங்களில் ஈடுபட்டு தம்மையும் அழித்துக் கொண்டு அவர்களது பெற்றோர்களுக்கும் துன்ப துயரங்களை கொடுத்து ஏதுமறியா அப்பாவிகளையுந் துயரத்தில் ஆழ்த்தி சமூகச் சீரழிவை உண்டு பண்ணிவருவது வேதனைக்குரியது.

இவற்றின் பின்புலத்தில் ஏதாவது அரசியற் காரணங்கள் உட்புகுந்திருக்கக்கூடும். அவற்றை இனங்காணவேண்டியது இளைஞர் யுவதிகளின் பொறுப்பே. இவற்றையெல்லாம் பகுத்தறிந்து கொண்டு தமது பிரச்சினைகளைத் தாமேதீர்த்துக் கொள்ள இளைஞர் யுவதிகள் முன்வரவேண்டும்.

அதைவிட்டு அவர்கள் பிரச்சினையாளர்களாக மாறுவதை எந்தவகையிலும் எமது இளைஞர் யுவதிகள் நியாயப் படுத்தமுடியாது. இந்த நாட்டின் முதுகெலும்பென வர்ணிக்கக்கூடிய இளைஞர் யுவதிகள், எதிர்காலத் தலைவர்களாகப் பரிணமிக்கப் போகும் இளைஞர் யுவதிகள், தமது கடமைகளை மறந்து மாயைத் தோற்றங்களில் தமது சிந்தனைகளை உட்புகுத்தி தம்மை அழித்துகொள்கின்ற செயல்களிலிருந்து விடுபட முன்வரவேண்டும்.

அதற்கு இளைஞர் யுவதிகளுக்குச் சரியானவழிகாட்டல்கள் கிடைக்கப் பெறல் வேண்டும். இன்றைய இளைஞர் யுவதிகள் க.பொ.தஉயர்தரப் பரீட்சையில் ஏதோ ஒரு இலக்கை அடிப்படையாகக் கொண்டு பரீட்சைகளுக்குத் தோற்றுகின்றார்கள்.

அந்தப் பரீட்சைகளில் தற்செயலாக எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெறமுடியாது தவறுகின்ற பட்சத்தில் அவர்கள் தமது தன்னம்பிக்கையை இழந்துவிடுகின்றார்கள். தொடர்ந்து என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனை இல்லாது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பாரமாகமாறுகின்றார்கள்.

இந்நிலையில் மாற்றுத்திட்டங்கள் அல்லது வழி முறைகள் பற்றிய சிந்தனைத் தெளிவுகளை ஏற்படுத்தவும் அவர்களுக்கு வழிகாட்டிதொழில்முறைக் கல்விகள் மற்றும் இன்னோரன்ன கல்வித்திட்டங்களில் அவர்களை ஈடுபடுத்தவும் அக் கற்கைநெறிகளில் சிறப்பான பெறுபேறுகளை பெற்று சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தில் இருக்கக்கூடியவர்களாக மாறுவதற்கும் அவர்களுக்கு சரியான வழிகாட்டிகள் அவசியமாகின்றன.

எதிர்காலம் பற்றிய ஒரு மலைப்பு இளைஞர் யுவதிகள் மட்டத்தில் ஏற்படும் போது அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி நல்லதொரு பாதை அமைத்துக் கொடுக்கவெற்றிகண்ட இளைஞர் யுவதிகளும் தாமே முன்வரலாம்.

இன்றைய காலகட்டத்தில் இளைஞர் யுவதிகள் தங்களைமற்றவர்கள் “திருத்துவதை”அடியோடு வெறுக்கின்றார்கள். ஆகவே இளைஞர் யுவதிகள் முன்னேற்றத்தில் சிரத்தையுடையோர் அவர்களின் மனோநிலையை முதலில் புரிந்துகொள்ள முன்வரவேண்டும்.

அவர்களின் உணர்வுகளை அவர்கள் மனோநிலையில் இருந்து புரிந்துகொள்ள முன்வரவேண்டும். அதன்பின் அவர்களுக்கு ஏற்றவகையில் பயன் தரும் நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கநாங்கள் உதவிபுரியவேண்டும்.

இளைஞர் யுவதிகளின் “தவறுகளை”நாங்கள் பெரிதுபடுத்தி அவர்களை “திருத்த” சமுதாயம் முன் வராமல் இளைஞர் யுவதிகளின் பலத்தை அவர்களின் நற்சிறப்புக்களை வெளிக் கொண்டுவர நாம் பாடுபடவேண்டும் என்கின்றது தன்னுறுதியுடைய இளைஞர் மேம்பாட்டு வளர்ச்சி பற்றிய அண்மையசிந்தனைகள்.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு இளைஞர் யுவதியிடமும் தனித்துவமான சில ஆற்றல்கள் வலிமைகள் உண்டு. அவற்றைவெளிக் கொண்டுவர நாம் முயல வேண்டும்.

எம்முடைய இளைஞர் யுவதிகள் உலகின் மற்றைய பாகங்களில் வசிக்கும் இளைஞர் யுவதிகளில் இருந்து வேறுபட்டவர்கள் அன்று. உலகரீதியாக இளைஞர் யுவதிகளை பலம் மிக்க சமூகமாகமாற்ற மற்றைய நாடுகளில் எது எதனைச் செய்கின்றார்களோ அவற்றை எமக்கேற்ற மாற்றங்களுடன் மாற்றி உபயோகிக்க நாம் முன்வரவேண்டும்.

முன்னையகாலங்களில் ஆசிரியர்கள் மாணவர்களின் சரியான வழிகாட்டிகளா கதிகழ்ந்தார்கள். தம்மிடம் கல்விகற்ற மாணவர்கள் நல்ல ஒருநிலையை அடையும் வரை தொடர்ச்சியாக அவர்களின் வழிகாட்டல்கள் ,மாணவர்கள் பாடசாலையைவிட்டு அகன்ற பின்பும் தொடர்ந்து இருந்துவந்தன.

ஆனால் இன்றுஅ வ்வாறான நிலைமைகளைக் காண்பது அரிது. எனினும் எமது இளைஞர் யுவதிகள் முறையான வழிகாட்டல்கள் இன்றி திசைமாறிச் செல்வதை அனுமதிக்க முடியாது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

#Wigneswaran   #jaffna  #tamilnews  #srilanka

No comments

Powered by Blogger.