பிறப்பிக்கும் இறைவிகளை சிறப்பாக மதியுங்கள்.

 
பெண் என்ற பெரும் படைப்பு கடவுள் தந்த வரம். சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பெண்ணாகப் பிறந்ததை சாபமாக கருதினாலும் ஒரு பிள்ளையைப் பெற்ற பின்பு வரும் அலாதிப் பிரியமும் வாழ்வின் மீதான பிடிப்பும் ஆச்சரியப்படத் தக்கது. இது பெண்மைக்குக் கிடைத்த வரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. குழந்தை வயிற்றில் உருவாகும் போதே அதன் எதிர்காலம் குறித்து உள் மனதில் வரைபடம் அமைப்பவள் பெண். ஆண்கள் வெளிப்படையாக சொல்லிக் கொண்டாலும் பெண்கள் அப்படி இல்லாமல் மனதில் கனவு சுமந்து கருவில் சிலை செதுக்கும் அதிசயச் சிற்பி பெண்.
         புதிதாகத் திருமணமாகி முதற் குழந்தை கருவாகும் போது பெண்ணின் உடல்நிலையில் சடுதியான மாற்றங்களை உணர முடிகிறது. இதுவரை சாதுவாக இருந்த பெண் முரண்பட ஆரம்பிப்பாள். திருமணத்தின் முன்னர் விரும்பி உண்ணாத உணவுகளை விரும்பி உண்ணுவாள். ஒருவிதமான பிடிவாதம் நிலைத்திருக்கும். தன்னை மட்டுமே கணவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற மனநிலை இருக்கும்.  இந்த மாற்றங்களுக்கு காரணம் புதிதாக அவளுடலுக்குள் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் என மருத்துவ உலகமும் உறுதி செய்கிறது.
        எனது முதற்குழந்தை வயிற்றில் உருவாகிய போது சுமார் மூன்று மாதங்களைக் கடந்த கருவளர்ச்சிக் காலத்தில் எனது வீட்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது. வழமையாக எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுத்துண்ணும் என் இயல்பில் மாற்றத்தை நான் கண்டேன். வீட்டில் நல்ல உணவு செய்து தரப்பட்ட போதும் உண்ண மறுத்தேன். கடையில் இடியப்பம் வாங்கித் தருமாறு அடம் பிடித்தேன். வாங்கி வந்த உணவை வீட்டிலிருந்த இன்னொருவருக்கும் எனக்கும் பங்கிட்டதை நான் விரும்பவில்லை. அடமும் அழுகையுமாக என் அறைக்குள் சென்று தாழிட்டேன். மீண்டும் இடியப்பம் கடையில் வாங்கப்பட்டு அதை யாருமே தொடாமல் தந்த போது மூன்றை சாப்பிட்டு மிகுதியை வைத்தது எனது கணவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் நிலமையை உணர்ந்து கணவரின் சகோதரியின் கணவர் எனது கணவருக்கு ஏதோ சொல்வதை என்னால் உணர முடிந்தது. அதன் பின் சிறு குழந்தை போன்ற என் பிடிவாதங்களை குடும்பத்தில் இருந்த சிறியவர்களும் புரிந்து கொண்டு செயற்பட்டமை கொஞ்சம் ஆறுதலாகவே இருந்தது.  அத்தோடு  இருவருமே முன்னர் அந்நியோன்யமாக கலந்துரையாடிய பெண்களுடன் எனது கணவர் கதைப்பதையும் சிரிப்பதையும்  நான் விரும்பாமல் முரண்பட்டேன். இதனையும் எனது கணவர் உணர்ந்து அப்படியான சந்தர்ப்பங்களைத் தவிர்த்துக் கொண்டார்.  பரஸ்பரம் குடும்பத்தில் இந்த உடலியல் மாற்றம் தொடர்பாக கலந்துரையாடப் பட்டதை சில காலங்களின் பின் நான் அவர்கள் மூலமாகவே அறிந்து கொண்டேன்.
            இந்தநிலை கருவைச் சுமந்த ஏழு மாதங்களாக எனக்குள் நிலவிய மாற்றங்களாகும்.  பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தேன். இது எப்படி நிகழ்ந்தது என்பதை இன்றுவரை நான் அறிய முடியவில்லை.
   குழந்தையைச் சுமக்கும் பெண்ணிற்கு பூரணமான புரிதல் தன்மை உடைய கணவராக ஆண் இருப்பது அவசியமானது.
" ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் " என்று  முன்னோர் சும்மா சொல்லி வைக்கவில்லை. அத்தோடு வேலைக்குப் போகும் பெண்களின் மீது ஆண்கள் அதிக அக்கறை பாசத்தோடு நடந்து கொள்வது ஆரோக்கியமான விடயமாகும். கண்காணிப்பு, கரிசனை, பாதுகாப்பு, பாசம் காட்டாத தன்மைகளால் பெண்ணின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தி மனவிரக்தியால்  தற்கொலைக்கும் இட்டுச் செல்லும்.
  நல்லவன் என்ற ஒற்றைச் சொல்லை நம்பி வந்த பெண்ணின் மனநிலையைப் பேணாத ஆண் சமூகம் புரட்சியாளர்களாக முற்போக்கு வாதிகளாக தேசப்பற்றாளர்களாக கவிஞர்களாக இருந்து பயனில்லை. ஆண்களின் கடின வார்த்தைகள் பாராமுகங்கள் கருவுற்ற காலப் பகுதியில் அவர்கள் விரும்பாத செயற்பாடுகள் மனத்துயரைப் பெரிதாக்கி விபரீத முடிவுகளை எடுக்கத் தூண்டும். ஏன் செய்கிறார்கள் எதற்காகச் செய்கிறார்கள் என்பதெல்லாம் அவர்களுக்குள் உருவாகிய கருவைத் தாங்கும் ஹார்மோன்களிடம் தான் கேட்டறிய வேண்டும்.
          இதைப் புரிந்து கொள்வதற்கான பிரத்தியேக வகுப்புகளும் தனியார் சிலர் மேற் கொண்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் இது ஒரு கட்டாயக் கல்வியாக உணர்த்தப் பட்டுள்ளது.  எமது முன்னோர் அனுபவக் கல்வியூடாக கருவுற்ற தாயை குழந்தைக்கு சமமாக கவனித்துக் கொண்டார்கள். தற்காலத்தின் இயந்திரத்தனமான புரிதல்களால் நிலமை கவலைக்கிடமாக மாறியுள்ளது.
         நவீன புரட்சிப் படையலிடும் ஆண்கள் வாய்ச் சொல்லில் வீரராக இருப்பதால் பெண்களின் உணர்வுகள் மதிக்கப்படாமல் தற்கொலையில் முடிகிறது. இது வாழ்நாளில் கருவுற்ற பெண்ணின் மரணம் வாழ்நாள் நெருக்கடியை ஏற்படுத்தி சமூக மதிப்பையும் குறைவடையச் செய்கிறது. உங்கள் வாரிசுக் கனவை நனவாக்குபவளை ஆண்களே மதித்து நடவுங்கள்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha kanthaija
       

No comments

Powered by Blogger.