சீனாவின் ஆபத்து வலையில் சிக்கும் 23 நாடுகள்!

ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 8 ட்ரில்லியன் டொலரை கட்டுமானத் திட்டங்களுக்காக முதலீடு செய்யும் சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டமானது மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இத்திட்டத்தின் ஊடாக சீனா தனது எத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்பதை அறியவே இவ்வாறான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

சீனாவின் இத்திட்டம் தொடர்பாக வொசிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வின் பிரகாரம், சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டமானது சிறிய மற்றும் வறிய நாடுகள் மீது பரந்தளவில் கடன் சுமையை உண்டுபண்ணுவதால், இந்த நாடுகளில் நிலைத்தன்மை பிரச்சினைகள் காணப்படுவதாகவும், இதனால் இந்த நாடுகள் இறையாண்மைக் கடன் என்கின்ற ஆபத்திற்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் இத்திட்டமானது 68 நாடுகளில் பாதிப்பைச் செலுத்துவதுடன் இந்த நாடுகள் ஒவ்வொன்றினதும் பொதுக் கடன் மீதும் தாக்கம் செலுத்தும்.

சீனாவின் திட்டத்திற்குள் உள்வாங்கப்படும் 68 நாடுகளில் 23 நாடுகள் தற்போது எதிர்நோக்கும் கடன் சுமை ஆபத்து மற்றும் இவற்றின் இறையாண்மை கடன் ஆபத்து விகிதம் மற்றும் உலக வங்கியின் கடன் பேண்தகு நிலை போன்றவற்றை இந்த ஆய்வானது பயன்படுத்தியுள்ளது.

2016 முடிவில், சீனா தனது ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 23 நாடுகளில் குழாய் இணைப்புக்களை இரவலாக வழங்கியுள்ளதால் இந்த நாடுகள் மீதான கடன் சுமை அதிகரித்ததாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவின் இத்திட்டம் காரணமாக எட்டு நாடுகள் தமது கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திப்பதாக ‘பூகோள அபிவிருத்திக்கான மையத்தின்’ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த எட்டு நாடுகளில் பாகிஸ்தான், டிஜிபோட்டி, மாலைதீவு, லாவோஸ், மொங்கோலியா, மொன்ரனிக்ரோ, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவை உள்ளடங்குகின்றன.

சீன-பாகிஸ்தான் பொருளாதார நடைபாதைத் திட்டம், சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்தின் மையப்புள்ளியாகச் செயற்படுவதுடன் சீனாவுடன் அதிக நிதி சார் தொடர்புகளை வைத்திருக்கின்ற நாடாகவும் பாகிஸ்தான் காணப்படுகிறது.

சீனாவால் கணிக்கப்பட்ட 62 பில்லியன் டொலரில் 80 சதவீத நிதியை பாகிஸ்தானுக்கு கடனாக வழங்கியுள்ளது.

இந்த ஆய்வின் பிரகாரம், சீனா தான் வழங்கிய கடன்களை மீளப்பெற்றுக் கொள்ளும் அணுகுமுறையானது கடந்த காலத்தில் பிரச்சினையை உண்டுபண்ணியமை உறுதிப்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, இலங்கை, சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா தன்வசப்படுத்தியது.

உலகின் ஏனைய கடன்வழங்குநர்களைப் போலல்லாது சீனாவானது கடன் பெற்ற நாடுகள் கடன்களைச் செலுத்தும் போது சந்திக்கும் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக சட்ட விதிகளுக்கு உட்பட்டிருக்கவில்லை.

கடன் பெற்ற நாடுகளுடன் நிதி சார் தொடர்புகளைப் பேணுவதற்கான சட்ட விதிகளைப் பின்பற்றும் கடன்வழங்கும் நாடுகளைக் கொண்ட Paris Club அமைப்பின் தற்காலிக பங்குதாரராக சீனா மட்டுமே உள்ளது.

உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன்வழங்குநர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் நியமங்கள், சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்திலும் பிரயோகிக்கப்பட வேண்டும் என ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ தெரிவித்துள்ளது.

இதற்காக இத்திட்டத்தில் உலக வங்கி மற்றும் ஏனைய பன்முக வங்கிகள் தமது பங்களிப்பை அதிகரிப்பதுடன் இத்திட்டங்கள் தொடர்பில் நியமங்களை உருவாக்குவது தொடர்பில் சீன அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் பாரிஸ் கழகத்தின் முதன்மையான கோட்பாடுகளை மேற்பார்வை செய்யக்கூடிய புதிய கடன் வழங்கு நாடுகளைக் கொண்ட குழுவொன்றை உருவாக்க வேண்டும் எனவும் இந்தக் குழுவானது சீனாவுடன் அர்த்தமுள்ள பங்களிப்பை உருவாக்க வேண்டும் எனவும் ஆய்வாளர் குழு விதந்துரைத்துள்ளது.

கடன் ஆபத்துக்களை குறைப்பதற்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு சீனாவானது தொழினுட்ப மற்றும் சட்ட ஆதரவுகளை வழங்க வேண்டும் எனவும் வொசிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ பரிந்துரைத்துள்ளது.

எடுத்துக்காட்டாக காடுகளைப் பாதுகாத்தல் போன்ற சூழல் பாதுகாப்பை நோக்காகக் கொண்ட திட்டங்களுக்கு கடன்களைப் பெறும் நாடுகளுக்கு ஆதரவாக கடன் இடமாற்று ஏற்பாடுகளை சீனா வழங்க வேண்டும் என இந்த மையம் பரிந்துரைத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

#china  #tamilnews  #srilanka

No comments

Powered by Blogger.