அமலா பால், காஜல் கருத்து!

உலகம் முழுக்க பிரபலமான MeToo, இந்தியாவிலும் பிரபலமாகி, பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பல பெண்கள், பல பிரபலங்களின் முகங்களைத்
தோலுரித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ் சினிமாவில் வைரமுத்து, ராதாரவி, ஜான் விஜய், கல்யாண் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களின் பெயர்கள் இந்தப் புகாரில் சிக்கி உள்ளன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில் நடிகைகள் அமலா பால், காஜல் அகர்வால் ஆகியோரும் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ராட்சசன் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் நடிகை அமலாபால் பேசும்போது, “சமூக வலைதளங்களில் நிகழும் MeToo மிக முக்கியமானது. நான் ஆதரிக்கிறேன். சினிமாவில் மட்டும் இல்லை, எல்லாத் துறையில் பாலியல் துன்புறுத்தல் இருக்கிறது. எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது தைரியமாக வெளியில் சொன்னேன். அதே போன்று எல்லாப் பெண்களும் தைரியமாக வெளியில் சொல்ல முன் வர வேண்டும்” என்றார்.
இதேபோல் நடிகை காஜல் அகர்வால், “தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாகக் கூறி வரும் பெண்களை பாராட்டுகிறேன். அவர்களுக்கு நான் என்றும் துணை நிற்பேன். பெண்கள் ஒவ்வொருவரும் சோதனை காலங்களில் நம்மைக் காப்பாற்றி கொள்ளப் போராடுவதோடு, உண்மையாகவும் இருக்க வேண்டும். அதேசமயம், இதை வைத்து பெண்கள் யாரும் விளம்பரத்துக்காகச் சேற்றை வாரி இறைத்துக் கொள்ள வேண்டாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.