மீ டூ விவகாரம்: கமல் கருத்து!

குற்றம் சொன்னவுடனே யாரையும் சாடிவிட முடியாது’ என்று மீ டூ விவகாரம் பற்றி கருத்துக் கூறியுள்ளார் நடிகர் கமல் ஹாசன்.
பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தும் வகையில் ‘மீ டூ’ (நானும் தான்) என்ற ஹேஷ் டேக் பிரச்சார இயக்கம் ட்விட்டரில் நடந்து வருகிறது. இதில் இந்திய அளவில் பல்வேறு பிரபலங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன. ‘மீ டூ’ ஹேஷ் டேக் மூலம் கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நாமக்கல் நிகழ்ச்சி முடித்து சென்னை திரும்பிய கமல் ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த கமல், “ மீ டூ புகார்களில் சினிமாத் துறை என்று தனியாக சொல்ல வேண்டாம். அனைத்து துறைகளிலும் இப்பிரச்சினை இருக்கிறது என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இந்த பிரச்சினைகள் வெளியே வந்தால், தொந்தரவுகள் இருக்காது என்பது தான் உலகளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம். அதில் இரண்டு தரப்பிலும் நியாயத்தைக் கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நாங்கள் என்ன செய்தாலும், நீங்கள் காட்டிவிடுகிறீர்கள் ஆகையால் திரைப்படத்துறை ஜாஸ்தியாக தெரியலாம். திடீரென குற்றம் சொன்னவுடனே யாரையும் சாடிவிட முடியாது” என்று கூறியுள்ளார்.
மேலும், நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருவதால் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று பொதுச் செயலாளர் விஷால் அறிவித்துள்ளார். இதேப் போன்று கன்னட சினிமா, நடிகைகளை பாதுகாக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ‘உரிமை மற்றும் சமத்துவம்’ என்ற இந்த அமைப்பில் நடிகர் சேதன்குமார், நடிகைகள் பிரியங்கா உபேந்திரா, ஸ்ருதி ஹரிகரன், இயக்குநர் கவிதா லங்கேஷ் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் மீதான பாலியல் கொடுமை குறித்து இந்த அமைப்பு விசாரித்து நடவடிக்கை எடுக்கும். இந்த அமைப்பின் சார்பில் 30 நடிகர், நடிகைகள் கையெழுத்திட்ட கடிதம் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.