பெங்களூருவில் பள்ளி முதல்வர் வெட்டிக் கொலை!

பெங்களூருவில் நேற்று (அக்-14) பள்ளி ஒன்றில் வகுப்பறையில் புகுந்த அடையாளந்தெரியாத மர்ம கும்பல் ஒன்று முதல்வரை வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
பெங்களூருவிலுள்ள அக்ரஹரா தசரஹள்ளி என்ற பகுதியில் ஹவனுார் என்ற பள்ளி உள்ளது. நேற்று அந்த பள்ளியின் முதல்வர் ரங்கநாத் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று காரில் வந்து இறங்கி நேரடியாக வகுப்பறைக்குள் புகுந்தது. பின்னர், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ரங்கநாத்தை மாணவர்கள் கண் முன்னரே சரமாரியாக வெட்டியது. இதனால் ரங்கநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் காரிலேயே தப்பிச் சென்று விட்டது.
பின்னர், சில மணி நேரம் கழித்து,மகாலட்சுமி நகரில் அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் நடமாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசாரை பார்த்தவுடன் அந்த நபர் அவர்களை தாக்கியுள்ளார். அதனால் வேறு வழியின்றி அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்துள்ளனர். அவருக்கு மருத்துவமனையில் சிகி்ச்சை அளித்த பின்னர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். போலீசாரின் விசாரணையில் இந்த கொலைக்கு பின்னணியில் நிலம் வாங்குவது தொடர்பாக கொல்லப்பட்ட முதல்வருக்கும் அந்த கும்பலுக்கும் பிரச்சினை இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
Powered by Blogger.