வேலை நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

புத்தளம் – ஆராச்சிகட்டுவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னை பணியிலிருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வித்தியாசமான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

குறித்த நபர் 80 அடி உயரமான நீர் தாங்கியின் மீது ஏறி சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,

ஆராச்சிகட்டுவ பிரதேசசபையில் 4 வருடங்களாக பணியாளராக சேவைபுரிந்த இவர் தன்னை பணியிலிருந்து நீக்கிய காரணத்தினால் சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்.

ஆர்க சுனில் சாந்த என்பவரே இவ்வாறு சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஆராச்சிகட்டுவ பொலிஸ் அத்தியட்சகர் அநுராத ஹேரத் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளார்.

இதன்போது, பிரதேசசபை செயலாளருக்கும் தமக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே தம்மை வேலையில் இருந்து நீக்கியதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

மேலும், நீதி என்பது அனைவருக்கும் சமன் எனவும், வேலை இல்லாததால் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் தான் பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்க்கையை கொண்டு செல்வதாகவும் தனக்கு நிரந்தர தொழில் எதுவும் இல்லை எனவும் தமக்கு உரிய தீர்வினை பெற்றுத் தருமாரும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆராச்சிகட்டுவ பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.