ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு சிறை சவால்!

தற்போதைய ஆளும் அரசின் அனைத்து மட்டத்திலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளதால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் முதல் லோக்கல் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் வரை அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் எனத் திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியுள்ளார்.

ஆளும் அ.தி.மு.க அரசைக் கண்டித்து தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக திருப்பூரில் இன்று கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், " தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க அரசின் நிர்வாகத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைத்து மட்டங்களிலும்  ஊழல் நிறைந்து கிடக்கிறது. குறிப்பாக சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட 3000 கோடி ரூபாய் டெண்டர் ஒதுக்கீட்டில், பொதுப்பணித்துறையின் அமைச்சராக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியே  வெளிப்படைத் தன்மையோடு செயல்படவில்லை. அவரது அமைச்சரவை சகாக்கள் பலரும் ஊழலில் திளைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

முட்டை, பருப்பு, நிலக்கரி இறக்குமதி, காவல்துறைக்கு ஒயர்லெஸ் கருவி வாங்கியது என அனைத்திலும் ஊழல் மயம் கொடிகட்டிப் பறக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மட்டுமல்ல, ஊழலில் திளைத்த ஒவ்வொரு லோக்கல் எம்.எல்.ஏக்களையும்கூட நாங்கள் விட்டு வைக்க மாட்டோம். கட்டாயமாக அனைவரையும் சிறைக்கு அனுப்புவோம்" என்று பேசினார். அத்துடன் குறிப்பாக, 'கருணாநிதி விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்தவர் என்று சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது எனப் பலரும் பல வருடங்களாகவே கொக்கரித்துக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையிலேயே சர்க்காரியா கமிஷனின் அறிக்கையில் ஏதாவது ஓரிடத்திலாவது அப்படிக் குறிப்பிட்டிருப்பதாக யாராவது நிரூபித்தால், நான் அ.தி.மு.க  அலுவலகத்தின் முன்பாக நின்று தற்கொலைகூட செய்துகொள்ளத் தயாராக இருக்கிறேன்" என்று சவால் விட்டார்.

#raja  #dmk   #admk  #ops  #rasa  #ஈ.பி.எஸ் #ஓ.பி.எஸ்  #எடப்பாடி பழனிசாமி  #ஆ.ராசா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.