இந்தியாவுடனான உறவைக் கெடுக்க முனையும் 4 பேர்!

மிகவும் கஷ்டப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட இந்தியாவுடனான நட்புறவை சீர்குலைக்கும் வகையில் செயற்படுபவர்கள் யார் என்பது விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.இதன்

பின்னணியில் நான்கு பேர் சம்பந்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர்கள் யார்? எதற்காக இத்தகைய சதி முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்பது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தன்னைப் படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப் படும் விடயத்தில் இந்தியப் புலனாய்வு பிரிவினருக்கு தொடர்பிருப்பதாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந் தன.

இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர்,

உண்மையில் அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, தமக்கான படுகொலை சதிமுயற்சி தொடர்பில் விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்றே ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார். இந்திய புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புபடுத்தி எத்தகைய விடயத்தையும் அமைச்சரவையில் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் வகையிலும் இரு நாட்டுத் தலைவருக்குமிடையிலான நட்புறவில் விரிசலை ஏற்படுத்தும் பொருட்டும் சதி முயற்சியொன்று இடம்பெற்றுள்ளது. இதன் பின்னணி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையை சுமுகப்படுத்த ஜனாதிபதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இந்திய உயர்ஸ்தானிகரிடமும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, இந்திய பிரதமருடனும் சுமுகமான பேச்சுவார்த்தை யொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் மேற்கொண்டிருந்தார்.

அன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் ஊடகவியலாளர் ஒருவருக்கு தொலைபேசி மூலம் மேற்படி செய்திகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியிலுள்ளோர் யார் என்பதை கண்டுபிடிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. இவ்வாறு அவர்கள் செய்யவேண்டியதன் அவசியம் என்னவென்பதையும் ஆராயவேண்டியுள்ளது.

இந்தியா எமக்கு மிகவும் நெருங்கியதும் அவசியமுமான நாடு. வர்த்தகம் சந்தைவாய்ப்பு உட்பட பல்வேறு துறைகளிலும் தொடர்புடைய நாடு. இந்த நிலையில் அந்நாட்டுடனான உறவை மேலும் பலப்படுத்த வேண்டியதே எமது செயலாக வேண்டும். இரு நாடுகளுக்குமிடையில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு இவ்வாறு செயற்பட்டவர்கள் உண்மையில் ஆளுமையுள்ளவர்களாக இருந்தால் தம்மை யாரென்று வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.