பக்தியா? சக்தியா?

(நிருபர் டி.எஸ்.எஸ்.மணி)
பக்தியுடன் பெண்கள் சபரிமலை அய்யப்பனை வழிபட வந்தால், அரசும், காவல்துறையும் அனுமதிக்குமாம். அதற்கான பாதுகாப்பை ஏற்பாடு செய்யுமாம். அதேநேரம், "சாகச உணர்வுடன் செயற்பாட்டாளர்கள்" "பலம்"

காட்ட வந்தால், அதை அனுமதிக்க முடியாதாம்.தேவசம் போர்டு அமைச்சர் விளக்கியுள்ளார். "சாகச" உணர்வா,"பக்தி" உணர்வா என்று "அளவிட" கேரள அரசு எப்படிப்பட்ட " அளவுமானியை" வைத்திருக்கிறார்கள் என்பதை விளக்கினால் புரிந்து கொள்ளலாம். அத்தகைய அளவுமானி கேரள முதல்வரிடம் இருக்கிறதா? அல்லது ஆலோசனை கொடுத்த ஆளுநராக உள்ள முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் சதாசிவத்திடம் இருக்கிறதா? அல்லது மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியிடம் இருக்கிறதா? தமிழ்நாட்டில் இந்த நேரத்தில் வந்து அமர்ந்திருக்கும் சி.பி.எம். அகில இந்திய பொதுச் செயலாளரான சீதாராம் யச்சூரியிடம் இருக்கிறதா, என்பதையும் சேர்த்து விளக்கினால் விவரமாக புரிந்து கொள்ளலாம்.
இந்த " அளவுமானி"யை உச்சநீதிமன்றத்தில், அடுத்த விசாரணையில் கேரள அரசு விளக்கமாக கூறவேண்டி வருமே? , பத்து வயது முதல் ஐம்பது வயது வரை உள்ள பெண்கள் சபரிமலைக்கு அய்யப்பனை தரிசிக்க செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு என்னவாயிற்று? இந்நாள் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசரின் தீர்ப்பை, முன்னாள் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையா? ஒண்ணுமே புரியமாட்டேங்குதே?
1972க்கு முன்னால், இதே சபரிமலைக்கு எல்லா பெண்களையும் அனுமதித்து வந்தோம். குழந்தை பெற்ற பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு 'சோறு உண்ண சொல்லிக் கொடுக்க" சபரிமலை வந்து, குழந்தைகளை தங்கள் மடியில் போட்டுக் கொண்டு," சோறுண்ணு" நிகழ்ச்சியை நடத்த முடியும் என்ற நிலை இருந்தது. 2016 ல் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு, "சபரிமலையில், நாட்டின் மற்ற கோவில்களை போல, பெண்களை அனுமதிக்கலாம்" என்ற முடிவை அறிவித்தனர். ஆனால் இப்போது, பக்தர்களின் உணர்வை கணக்கில் எடுத்து நிலையை மாற்றிக் கொள்கின்றனர். வருகிற தேர்தலில், சி.பி.எம். ஐ எதிர்த்து காங்கிரஸ் கட்சி பக்தர்களின் வாக்குகளை வாங்க, கேரள மாநிலத் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் நிலைப்பாட்டை மீறி, "பெண் பக்தர்களை அனுமதிக்க முடியாது" என்று அறிவித்து போராட்டம் நடத்துகிறார்.
உடனே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், தங்களது புதிய நிலைப்பாட்டிற்கு ஒப்ப, கேரளாவில், சி.பி.எம்.ற்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் கைகளை பலப்படுத்த, " சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க முடியாது" என்று கூறிவிட்டனர். உடனே பா.ஜ.க.வும் அதே நிலைப்பாட்டை எடுத்து விட்டது. இப்படியாக ஒரு "சமூக நீதிக் " கான. "பெண் உரிமைக்கான" கோரிக்கை, வருகிற மக்களவை தேர்தலுக்காக " மாற்றப்பட்டு" விட்டது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் , அவர் சார்ந்துள்ள சமூகத்தின் அமைப்பான,"என்.எஸ்.எஸ்.என்ற நாயர் சேவா சங்கமும்" தீவிரமாக உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கிளம்பும் போது, முதல்வர் பினராயும் தான் சார்ந்துள்ள சமூகத்தின் அமைப்பான,"எஸ்.என்.டி.பி. என்ற ஈழவர் அமைப்பின்" தலைவர் வெள்ளப்பள்ளி நடேசன்" மூலம் நாயர் சேவா சங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து, "உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்க வேண்டும்" என்ற அறிவிப்பை கொடுப்பதில் ,வெற்றியடைந்திருக்கலாம். ஆனாலும் இவையெல்லாமே "தேர்தல் அரசியல்" என்பதுதான் உண்மை.
ஏன் என்றால், "ஈழவர் அமைப்பின் தலைவர் வெள்ளப்பள்ளி நடேசனை" கேரள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா சந்தித்து, தங்களுடன் கூட்டணி சேர அழைத்ததும், அதையொட்டி, பினராய் விஜயன் மூலம் . கீழ் மட்டத்தில் உள்ள "ஈழவர் அமைப்பான எஸ்.என்.டி.பி.யின்" கிளைகள், சி.பி.எம் செல்வாக்கு இருந்ததால், வெள்ளப்பள்ளியை எதிர்த்து போராடியதையும் நாம் அறிவோம். இப்போது சில மாதங்களுக்கு முன்பு, அதே வெள்ளப்பள்ளி நடேசன், " பா.ஜ.க.. தங்களை மதித்து சரியாக நடத்தவில்லை" என்று கூறி, "பா.ஜ.க எதிர்ப்பு" அறிக்கையை வெளியிட்டதும் அனைவரும் அறிவர். ஆகவே இப்போது, வெள்ளப்பள்ளியின் நிலைப்பாடு "தேர்தல் அரசியல்" எனபதும்
தெரியவந்துள்ளது. ஆனால் ஆண்டாண்டு காலமாக கேரளத்துப் பெண்கள் மத்தியில் பொதுவாக ஊறிப்போயிருக்கும்," பிரமச்சாரி அய்யப்பனை இளம் பெண்கள் பார்க்கக் கூடாது" என்ற கருத்து, சாதிகளைத் தாண்டி, நாயர், மற்றும் ஈழவப் பெண்களிடமும் குடி கொண்டுள்ளது.அதாவது வெள்ளப்பள்ளி கருத்தை, அவர்களது ஈழவ சமூகப் பெண்கள் பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்ளவில்லை.
இத்தகைய சூழலை மனதில் கொண்டே, சி.பி.எம். முதல்வரும், சபரிமலைக்கு வருகை தந்த இரண்டு பெண்களுக்கும் "சாமி கும்பிட அனுமதிக்க பாதுகாப்பு" தருவோம் எனக் கூறிவிட்டு, "பக்தர்களுக்கு வேதனை கொடுக்க விரும்பவிலை" என்ற "புதிய தத்துவத்தை" நடைப் பந்தல் வரை கொண்டுவரப்பட்ட இரு பெண்களை வைத்துக் கொண்டு காவல்துறை மூலம் பேச வைத்து விட்டார். .அதுமட்டுமின்றி, "புதிய கண்டுபிடிப்பாக" உண்மையான பக்தி, சக்தி காட்டும் சாகசம் என்று பெண்களிலேயே "ரகம்" பிரிக்கவும், செய்து விட்டார். அதாவது தாங்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்க விடாப்பிடியாக முயன்றோம், அதேசமயம் "சாகச உணர்வுக்கு இடம் கொடுக்கவிலை" என்று தப்பித்துக் கொள்ளும் போக்கை செயல்படுத்தியுள்ளார். அதுவும் தேர்தலை மனதில் வைத்தே செய்யப்பட்டதுதான்.
ஏன் என்றால் அவர் சார்ந்திருக்கும் சி.பி.எம்.கட்சியின் இளைஞர் அமைப்புகளும், மகளிர் அமைப்பினரும் ஏன் "பெண்களின் உரிமைக்கு போராடவில்லை? என்ற கேள்வியே இதற்கான பதிலாக அமையும். அல்லது தங்கள் கட்சியின் இளைஞர்களும், மகளிரும் கேரளாவின் பெரும்பான்மை மகளிரின் "பிற்போக்கு மனோபாவத்தில்தான்" இன்னமும் இருக்கிறார்கள் என்று ஒப்புக் கொள்ளவேண்டும். .இதேபோல, தமிழ்நாட்டில், சமீபத்தில், நடத்தப்பட்ட," ஐ.பி.எல். எதிர்ப்பு போராட்டத்தை" ஒரு புறம் அனுமதித்து, பிறகு தடுத்துவிட்டு, நடுவண் அரசின் வழிகாட்டலில், ஐ.பி.எல் போட்டியை அனுமதித்து, "பாதுகாப்பும்" கொடுத்து விட்டோம் என்றும், அதேநேரம், எதிர்ப்பு போராட்டம் "பெரிய அளவில் நடக்கிறது",என்பதைக் காட்டி, நடுவண் அரசின் உள்துறை முடிவின்படி, தமிழ்நாட்டை விட்டு ஐ.பி.எல். போட்டியை விரட்டி விட்டோம் என்றும் காட்டியவர்கள் தமிழ்நாட்டு முதல்வர் ஈ.பி.எஸ். தலைமையிலான அரசின் உளவுத் துறை.. அத்தகைய "தந்திரத்தை" இந்த அரசு கேரள அரசுக்கு கொடுத்து உதவினார்களா என்பது நமக்கு தெரியாது.
அடுத்து, எப்படி தெலங்கானாவைச் சேர்ந்த ஊடக செய்தி வாசிப்பாளர் கவிதாவுடன், செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா வரலாம் என்றும், அவர் மாற்று மதம் என்றும் பேசத் தொடங்கியுள்ளனர். ஒரு உண்மை இந்த இடத்தில் புரியப்பட்ட வேண்டும். சபரிமலை அய்யப்பனை தரிசிக்க வருபவர்கள், "வாவர் சாமி" என்ற முஸ்லீம் சாமியையும் தரிசித்து விட்டே மேலே அய்யப்பனிடம் செல்வார்கள் என்பதும், மாற்று மதங்களை சேர்ந்தவர்களும், அய்யப்பன் கோவிலுக்கு வருவது பழக்கத்தில் உண்டு என்பதும், அய்யப்பன் காடுகளில் வாழும் ஒரு "பழங்குடி மக்களின் சாமி" என்பதும், "பவுத்த அடையாளம் கூட அவருக்கு உண்டு" என்பதும், வரலாற்றில், அய்யப்பன் இந்து மதம் என்பதுபோல பார்க்கப்படவில்லை என்பதும், மதப் பிரச்சனையைக் கிளப்புகிறவர்களுக்கு தெரியுமா என்பது நமக்குத் தெரியாது.
மொத்தத்தில், இந்த விவகாரத்தில், "தேர்தல் அரசியலும்,பின்தங்கிய உணர்வுள்ள மக்களின் பெயரால் போற்றப்படும் பிற்போக்கு உணர்வுகளும்" தூக்கலாக தெரிகிறது. அத்தகைய தேர்தல் அரசியலுக்கு, காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ்.,பா.ஜ.க.,சி.பி.எம்" எல்லோருமே நிலைப்பாடுகளை மாற்றி, மாற்றி, தங்கள், தங்கள் பங்களிப்பை செலுத்தி விட்டார்கள் என்பதே நமக்கு கிடைக்கும் படிப்பினை.

No comments

Powered by Blogger.