நிமலராஜனின் படுகொலையினை அரங்கேற்றிய ஈபிடிபி!


ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலையினை அரங்கேற்றிய ஈபிடிபி தற்போது தமிழ் மக்களிற்கு நீதியையும் தீர்வையும் பெற்றுக்கொடுக்கப்போவது வேடிக்கையானதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (19) வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது.

யாழ் பிரதான வீதியிலுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து பிற்பகல் 03.30 மணியளவில் யாழ் ஊடக அமையத்தில் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுரைகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் வடக்குமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் செயலாளர் செ.கஜேந்திரன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ,உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள்,யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள்  உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அங்கு உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன்  2000ம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நிமலராஜனின் படுகொலையுடன் பெருமெடுப்பில் ஆரம்பமான ஊடகப்படுகொலை  2009ம் ஆண்டின் யுத்த முடிவு வரையாக 41 தமிழ் ஊடகவியலாளர்களையும் ஊடகப்பணியாளர்களையும் இலங்கையில் காவு கொண்டிருந்தது.

ஊடக சுதந்திரத்தை காப்பாற்றப்போவதாக ஆட்சிக்கதிரையேறிய நல்லாட்சி அரசும் கூட இன்று வரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்,ஊடகப்பணியாளர்கள் தொடர்பில் நீதிக்குப்பதிலாக வெறும் மௌனத்தையே பதிலாக வழங்கிவருகின்றது.

நிமலராஜன் படுகொலை தொடர்பிலான விசாரணை கடந்த 14 வருடங்களிற்கு மேலாக இலங்கை சட்டமா அதிபர் திணைக்கள ஆலோசனையினை எதிர்பார்த்து கிடப்பிலுள்ளது.

நிமலராஜனின் படுகொலையினை ஈபிடிபியே மேற்கொண்டதாக சுதந்திர ஊடக இயக்கம் அம்பலப்படுத்தியிருந்தது. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

ஆனால் இப்பொழுது ஈபிடிபியோ தமிழ் மக்களிற்கு நீதி கிடைப்பது பற்றி கதைக்கின்றது.காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளினை பற்றியெல்லாம் பேசி போலி முகத்துடன் உலாவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.