மக்களை அணிதிரட்டி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும்: ஈழப்புரட்சி அமைப்பு!

மக்களை அணிதிரட்டி அதன் ஊடாக அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பயணிப்போம் என ஈழப்புரட்சி அமைப்பு தெரிவித்துள்ளது.


வவுனியா, பூந்தோட்டத்தில் அமைந்துள்ள ஈழப்புரட்சி அமைப்பின் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கட்சியின் பொதுக்குழு கூட்டமும் நிர்வாகத் தெரிவும் நடைபெற்றது.

அதன்பின்னர் கட்சியின் சார்பில் தேசிய அமைப்பாளர் மாணிக்கம் ஜெகன் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “அரசியல் நகர்வுபற்றி வடமாகாண முதலமைச்சர் ஒரு ஸ்திரமான பதிலை எந்த இடத்திலும் கூறவில்லை. எனினும் தமிழ்மக்களைப் பொறுத்தளவில் வடமாகாண முதலமைச்சர் மீது பாரிய நம்பிக்கையை வைத்து இருக்கின்றார்கள்.

அந்த நம்பிக்கையை சிதைக்காத வண்ணம் ஈழப்புரட்சி அமைப்பு செயல்படும் என்பதை இங்கே நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இன்றைய நிலையில் மக்களைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்களால் ஏற்படுத்தப்படும் கூட்டு மக்கள் விரோத சக்தியாக மாறும் போது அந்த கூட்டில் இருந்து வெளியேறி மீண்டும் ஒரு மக்கள் நலனுக்காக ஒன்றிணைவது என்பது அரசியலைப் பொறுத்தவரையில் மிகச் சாதாரண விடயம். அதை நாங்கள் தெளிவாக புரிந்திருக்கிறோம்.

ஆகவே மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சிகளோடு இணைந்து மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது மக்கள் விரும்புகின்ற அரசியல், ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொள்ள எமது அமைப்பு தொடர்ந்து பயணிக்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

தமிழ் மக்கள் தெளிவான ஒரு அரசியல் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதை உணர்கின்றோம்.

ஆனால் நிச்சயமாக ஒற்றையாட்சியின் கீழ் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை எட்ட முடியாது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

மக்களை அணிதிரட்டி அதன் ஊடாக அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கையில் ஈரோஸ் தொடர்ந்து பாடுபடும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
Powered by Blogger.