மாணவி இடைநீக்கம்: விரைவில் போராட்டம்!

கோவை அரசு கலைக் கல்லூரியில் பகத்சிங் பிறந்தநாளைக் கொண்டாடியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவி மாலதி, விரைவில் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு எம்ஏ வரலாறு பயின்றுவரும் மாணவி மாலதி. கடந்த செப்டம்பர் 28ஆம் தேதியன்று, இவர் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது, பகத்சிங் குறித்து உரையாடினர் மாணவர்கள். இந்த கொண்டாட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், கடந்த 1ஆம் தேதியன்று மாணவி மாலதியை இடைநீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டது கல்லூரி நிர்வாகம். பகத்சிங் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குக் கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ள நிலையில், கல்லூரியின் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவர் மாணவர்களைத் திரட்டியதாகக் காரணம் கூறப்பட்டது. இது குறித்து, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
பகத்சிங் பிறந்தநாளைக் கொண்டாடியதற்காக மாணவி மாலதி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பல்வேறு அமைப்புகளும் இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், இன்று (அக்டோபர் 20) கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மாணவி மாலதி. "பகத்சிங்கின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளைக் கொண்டாடுவது, எந்த வகையில் குற்றமாகும். பகத்சிங்கின் பிறந்தநாளைக் கொண்டாடும் மாணவர்களைத் தீவிரவாதிகளாகப் பார்க்கிறது இந்த அரசு. ஆங்கில ஏகாதிபத்திய அரசு பகத்சிங்கைத் தீவிரவாதியாகச் சித்தரித்ததைப் போன்று, இன்று எங்களைத் தீவிரவாதியாகச் சித்தரிக்கிறது இந்த அரசு. கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் அரசியல் பேசுவதற்கும், ஒன்றிணைந்து செயல்படுவதற்கும், மாணவர்களின் வளாக ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். பகத்சிங்கின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை, அரசு தினமாக அறிவிக்க வேண்டும்" என்று கூறினார்.
கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக, மாணவர்களை ஒன்று திரட்டி விரைவில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார் மாணவி மாலதி.

No comments

Powered by Blogger.