#MeeToo பெண்களுக்கு பிரேமலதா அட்வைஸ்!

#MeeToo இயக்கத்தை பெண்கள் சர்ச்சைக்காக பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், பெண்கள் நெருப்பு போன்று இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தேமுதிக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொருளாளர் பிரேமலதா தலைமையில் இன்று (அக்டோபர் 21) நடைபெற்றது. அப்போது, “யாருக்கு எப்போது என்ன பதவி கொடுக்க வேண்டும் என்பது விஜயகாந்துக்கு தெரியும். பொருளாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டது அறிவிக்கும்போதுதான் எனக்கே தெரியும். கலைஞர், ஜெயலலிதா போன்ற சிங்கங்களை எதிர்த்துப் போட்டியிட்ட விஜயகாந்த், தற்போதுள்ள பூனைகளை கண்டு அஞ்ச மாட்டார்” என்று பிரேமலதா பேசினார்.

பெண்கள் நெருப்புக்கு இணையாக இருந்தால் ஆண்கள் 10 அடி தள்ளி நின்று பேசுவார்கள் என்று மீடூ குறித்து பேசிய அவர், “தேமுதிக ஆட்சி அமைய அனைவரும் அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும் ”என்றும் மகளிர் அணி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ”இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக விரைவில் விஜயகாந்த் வெளிநாடு செல்லவுள்ளார். இது தொடர்பாக கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிடும். சிகிச்சை முடிந்தபின்னர் விஜயகாந்தின் வீர உரைகளை மக்கள் கேட்கலாம்.

பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் நடப்பதாக அனைவரும் மீடூ இயக்கம் மூலம் பேசி வருகிறார்கள். நம் வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது. நாம் உறுதியாக இருந்தால், எங்கும் தவறு நடக்காது.

மீடூவை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும். சர்ச்சைக்குரியதாகவோ, விவாதத்திற்குரியதாகவோ மாற்றகூடாது. ஆண்களும் பெண்களை சகோதரிகளாகவும் தோழிகளாக பாருங்கள்” என்று அறியுறுத்தினார்.

ஒவ்வொரு மதத்துக்கும் பாரம்பரியம் உள்ளது. ஒரு தீர்ப்பால் அதை மாற்றமுடியாது. எனவே, பாரம்பரியத்தை அப்படியே இருக்க விடுவதுதான் நல்லது என சபரிமலை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பிரேமலதா, “உள்ளாட்சித் தேர்தலை நடத்தவே தமிழகத்தில் வழியில்லை. மக்களவைத் தேர்தலோடு சேர்ந்தே சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்படும் என்று தகவல் வந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படட்டும், அந்த தேர்தலில் தனது முழு பலத்தை தேமுதிக வெளிப்படுத்தும். தேமுதிக பலமாகத்தான் உள்ளது. மேலும் வலு சேர்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது” என்று கூறினார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.