எல்லைப்புற வீட்டுத் திட்டத்திற்கு அடிக்கல் !

ரணவிரு சேவா வீட்டு வசதிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மங்களகமவில் சிங்கள மக்களுக்கான 50 வீடுகளைக் கொண்ட வீட்டுத் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.


ரணவிரு சேவா அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சித் திட்ட அலுவலர் ரீ.எச்.கீதிகா ஜயவர்தன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக 2 இலட்ச ரூபாய் நன்கொடையாகவும் 3 இலட்ச ரூபாய் மானிய அடிப்படையிலான கடனாகவும் மொத்தம் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இவ்வீடுகள் 3 மாத காலத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம், மங்களகம பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.எம்.எஸ். திஸாநாயக்க உட்பட பௌத்த பிக்குகள், முப்படை அதிகாரிகள், பயனாளிகள், மக்கள் பிரதிநிதிகள், கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 
Powered by Blogger.