அமெரிக்காவுக்கு வருவதற்கு தடையில்லை!

தகுதி அடிப்படையிலான நபர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடையில்லை. சாதகமான பேச்சு தகுதி, திறமை கொண்டவர்கள் அமெரிக்காவுக்கு வரமுடியுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்த காலத்தில் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த ஏராளமான வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியான  டொனால்ட் ட்ரம்ப் இதற்கு எதிராக இருந்தார்.

அவர் ஜனாதிபதியாக தேர்தல் களத்தில் நின்றபோதே அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு வேலை வழங்குவதை எதிர்த்து பிரசாரம் செய்தார். நான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை கொடுத்து வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதன்படி ஆட்சிக்கு வந்த அவர் வெளிநாட்டினர்களுக்கு வேலை வழங்குவதற்கும், வெளிநாட்டினர் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் குடிபுகுவதற்கும் எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

வெளிநாட்டினர் வேலை பெறுவதற்கான விதிமுறைகள் பலவற்றிலும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். இதனால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில்  ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, வெளிநாட்டினர் குடியேற்றம் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த டிரம்ப், அமெரிக்க எல்லைக்குள் வெளிநபர்கள் நுழையும் விவகாரத்தில் நான் மிகவும் கண்டிப்பாக நடந்து வருகிறேன்.

வெளிநாட்டினர் ஏராளமானோர் அமெரிக்காவில் நுழையத் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

எல்லை பாதுகாப்பு படையினரும், சட்ட அமலாக்க படையினரும் அதை தடுத்து நிறுத்தி சிறப்பான பணியை செய்து வருகிறார்கள்.

நமது நாட்டுக்கு யார் வேண்டுமானாலும் சட்ட ரீதியாக வரலாம். சட்ட விரோதமாக ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

அமெரிக்காவுக்கு வருபவர்கள் உரிய தகுதியான திறமையான நபர்களாக இருந்தால் அவர்களை வரவேற்கிறோம். அந்த வகையில் ஏராளமானபேர் அமெரிக்காவுக்கு வரட்டும். நமது நாட்டில் ஏராளமான சிறந்த கார் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. மீண்டும் அதே நிலை வரவேண்டும். அதற்கு உதவும் வகையில் வெளிநாட்டினர் இங்கு வரலாம்.

வெளிநாட்டினர் யார் வந்தாலும் அவர்கள் இந்த நாட்டுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம் எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.