ஒருமித்த நாடு’ (ஏகிய ராஜ்ஜிய) -சுமந்திரன் விளக்கம்!

புதிதாக தயாரிக்கப்படும் அரசமைப்பில், இலங்கை அரசின் தன்மையை விளங்கப்படுத்தப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘ஒருமித்த நாடு’ (ஏகிய ராஜ்ஜிய) என்ற சொற்றொடர் மூலமாக, இலங்கை அரசின் தன்மை, ஒற்றையாட்சித் தன்மையிலிருந்து சமஷ்டியின் பக்கமாக நகர்ந்து விடும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தெரிவித்தார்.


பருத்தித்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், “ஒற்றையாட்சியா, ஒருமித்த நாடா?” என்ற தலைப்பில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் காணப்பட்ட அரசமைப்புகளில், “ஒற்றையாட்சி” என்ற சொல் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக விளக்கமளித்த அவர், சர்வதேச ரீதியாக அதன் பயன்பாடு தொடர்பாகவும் விளக்கினார். அத்தோடு, அரசமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில், “யுனிட்டரி ஸ்டேட்” என்பது நீக்கப்பட்டு, “ஏகிய ராஜ்ஜிய/ ஒருமித்த நாடு” எனப் பயன்படுத்தப்படப் பரிந்துரைக்கப்பட்ட பின்னர், தெற்கில் ஏற்பட்ட விமர்சனங்களையும் அவர் எடுத்துக் கூறினார்.

“இலங்கையின் தெற்குப் பகுதியில், ஒருமித்த நாடு என்ற சொல், சென்ற செப்டெம்பர் மாதம் வெளிவந்த உடனேயே, இது நாட்டைப் பிரிப்பதற்கான ஒருசொல் என்று, பெரியதொரு பிரச்சினை எழுப்பப்பட்டது. அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்கள், சாதாரணமானவர்கள் அல்லர்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்.

“அங்கே, சட்டத்தரணிகள் சங்கமே அப்படியாகச் சொல்லிக் கொண்டிருக்க, இங்கே வடக்கிலேயும் கிழக்கிலுயும், இது ஒற்றையாட்சி தான். இது ஒற்றையாட்சிக்கு ஏதோ முலாம் பூசி, மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லுகிறார்கள். ஒற்றையாட்சி என்பது, பிரித்தானியாவை உதாரணமாகக் கொண்டே காணப்படுகிறது.

“ஏகிய” என்ற சொல், வடமொழி அடியைக் கொண்டது , அதை ஐக்கிய என்று அழைக்க முடியும். “ஏகிய ராஜ்ஜிய” என்பதை, ஐக்கிய நாடு அல்லது ஒருமித்த நாடு எனத் தமிழில் அழைப்பது தான் சரியானது. அதேபோல், புதிய அரசமைப்பில், ஒற்றையாட்சி என்பதை விளங்கப்படுத்தும் “யுனிட்டரி ஸ்டேட்” என்பதை வெளிப்படுத்தாமல், “ஏகிய ராஜ்ஜிய” (அல்லது ஒருமித்த நாடு) என்பதைப் பயன்படுத்துவதோடு, அதற்கான வரைவிலக்கணத்தை அதில் குறிப்பிட வேண்டுமென, இடைக்கால அறிக்கை குறிப்பிடுவதையும் அவர் ஞாபகமூட்டினார். 

No comments

Powered by Blogger.