நேற்றைய நாள் தமிழர் வரலாற்றில் கறைபடிந்த நாள் -சி.சிவமோகன்!

தமிழர் அரசியல் இருப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருக்குலைக்க சிங்களத்தால் களமிறக்கப்பட்ட தமிழினத் துரோகியை அடையாளம் காட்டிய நேற்றைய நாள் தமிழர் வரலாற்றில் கறைபடிந்த நாள் என வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.


முன்னாள் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சி தொடர்பாக வவுனியாவில் அவரது இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “சிங்களத்துடன் இரண்டறக் கலந்து, நீதி அரசர் பதவிபெற்று சிங்கள சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்களை சிறையில் தள்ளிய, வேடதாரியின் வழைமையான போலி வணக்கத்துடன் தொடங்கிய உரையை நேற்று அனைவரும் கேட்டிருப்பீர்கள்.

தமிழினத்தை கூறுபோட்டு உருக்குலைக்க செயற்படும் சிங்கள தேசத்திற்கு சாமரம் வீசும் முன்னாள் முதலமைச்சரின் முயற்சியே இது .

கட்சி அரசியல் இன்றி தமிழர்களை ஒன்றாக்கி தமிழ் மக்கள் பேரவை ஊடாக சாத்வீக போராட்டம் மூலம் தமிழர் உரிமையை நிலை நாட்டபோகின்றோம் என்று சொன்னவர்களின் சாயம் நேற்றோடு வெளுத்துபோனது.

புத்தி ஜீவிகளாக தம்மை அடையாளம் காட்டி தமிழ் மக்கள் பேரவையூடாக வெகுஜன போராட்டத்தை கட்சி வேறுபாடுகள் இன்றி முன்னெடுக்க இருந்த சந்தர்ப்பத்தையும் தவிடு பொடியாக்கி தடம்புரண்டு வேடதாரியின் புதிய கட்சியில் சங்கமித்த பேரவைக்கு ஒரு வாசகம் சொல்கிறேன்.

மறத்தமிழனால் ஒதுக்கபட்ட பின் போலி வேசம் போட்டு புதிய கட்சி ஆரம்பித்த பேரவை நேற்றிலிருந்து உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

தேசியத் தலைவர் பிரபாரகரன் உருவாக்கிய தமிழர் அரசியல் இருப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருக்குலைக்க சிங்களத்தால் சூட்சகமாக களமிறக்கபட்ட தமிழின துரோகியாக அடையாளம் காட்டியநாள். நேற்றய நாள் தமிழர் வரலாற்றில் கறைபடிந்த நாள் என வரலாறு தமிழருக்கு குறித்துச் சொல்லும் என்பதை மக்களுக்கு சொல்லிவைக்கிறேன்.

பொறுமையின் விளிம்பிலும் துரோகத்தனங்களின் எல்லையிலும் கூட்டமைப்பு புதியவிருட்சம் எடுக்கும் என்பதற்கான ஒரு உதாரணமே நேற்றுநடந்த நிகழ்வு.

99 வருடகால அரசியலைபற்றி அவர் பேசினார். அந்த அரசியல் போராட்டத்திலோ, அல்லது ஆயுதப் போராட்டத்திலோ உங்களின் பங்கு எங்கே இருந்தது?

சிங்களத்தில் நீதி அரசராகி, சொந்த பரம்பரையையே சிங்களத்திற்குத் தாரைவார்த்து அங்குதான் பதவிப்பிரமாணம் எடுப்பேன் என்று கூறி அதனை செவ்வனே நிறைவேற்றி முடித்த நீங்களா தமிழ் மக்களின் விடுதலையை முன்னெடுத்துச் செல்லப்போகின்றீர்கள்?

புலிகளின் போராட்டத்தை ஒரு நோயாக தன்னுடைய வாயால் சித்தரித்த அவர் பின்னால் அணி திரள்வார்களா மறத்தமிழர்கள்?

எனவே இந்த போலிவேசம் தேவையா? வரலாற்றுத் தவறின் அடையாளமான இவர் ஒரு நச்சுச்செடி. என்னைப் பொறுத்தவரை அது வளர்ந்து வருவதற்கு முன்னர் மக்களாக அதனை அழித்து விட்டு தீபாவளி கொண்டாடவேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.