நாதன் தூணாக விளங்கிய ஒரு மாவீரன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கு தூணாக நின்ற ஒரு போராளி. புலம் பெயர் தமிழர் வாழும் பரப்பெங்கும் இயக்கத்தின் செயல்பாடுகளை பரப்பலாக்கி விடுதலைப் போரின் அடிப்படைத்
 தேவைகளுக்கு தோள் கொடுத்த மாவீரன். 12 ஆண்டுகள் இயக்கத்தின் கால்களாக நின்று ஓடி ஓடி உழைத்த மாவீரன் நாதன். யாழ்ப்பாணம் அரியாலையில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவன். தாயின் அரவணைப்பில் வாழ்ந்த நாதன் சிங்கள அரச பயங்கரவாத புயல் எம் தேசத்தை சூறையாடிய போது தாயாலும் சகோரராலும் பிரான்சுக்கு அனுப்பப்பட்டவன்.


அரச பயங்கரவாத புயல் தமிழர் மண்ணில் விதைத்து விட்ட விடுதலை தாகம் நமது நாதன் உயிரிருப்பை பாதித்து விடக்கூடாது என்பதற்காகவே அல்லது தம் கடைக்குட்டி எங்காவது தப்பிப்பிழைத்து உயிரோடு நிம்மதியாக வாழட்டும் என்ற பேராசையினாலோ அந்தத் தாய் தன் மகனை புலம் பெயர வைத்தாள்.

பிரான்ஸ் நாதனுக்கு நிம்மதியைத் தரவில்லை. தன் இருப்பின் ஆணிவேர்களை மறந்து விட, மறுத்து விட அவன் தயாராக இல்லை. அகதி வாழ்க்கை, அது தந்த அவலம் சமுதாயத்தின் எதிர்காலம் அது பற்றிய அக்கறை என்பன அவனைச் சிந்திக்க வைத்தது. சாதாரண தன் சக மனிதனைப் போல பிரான்சில் வாழ்ந்து உழைத்து அனைத்து அவமானங்களோடும் சமரசம் செய்து கூனிக்குறுகி வெறுமனே உயிர்வாழ்ந்து விட அவன் தயாராக இல்லை.

தன்னை இனம் கண்டு தனக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டு போராட துடிக்கும் ஒரு மானிடனாக அவன் வாழவே விரும்பினான். அவனது போராளித்துவம் இந்த எண்ண ஓட்டத்தில் தான் பிறப்பெடுத்தது. அவன் தன்னை தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தலைமுறையுடன் இணைத்துக் கொண்ட கருத்துத்தளம் இங்கு தான் பிறப்பெடுத்தது.

1985இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரெஞ்சு பணியகத்துடன் நாதன் தன்னை இணைத்துக் கொண்டான். இயகத்தின் அடிப்படைத் தேவையான நிதி சேகரிப்புப் பணியில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டான். இயக்கத்தின் துடிப்பான உறுப்பினரான இனம் காணப்பட்டு இருந்தான். போராட்டம் கூர்மையடையத் தொடங்கிய காலகட்டங்கள் அவை போராட்டத்தின் தேவைகள் மலை போல குவிந்திருக்க நாதன் இறக்கைக் கட்டி எம் மக்கள் வாழும் வீடுகள் தோறும் நிதி சேகரித்தான். 12 ஆண்டுகளின் பிற்பாடும் எங்கள் நாதனிடம் அதே துடிப்பும் அதே ஆர்வமும் கொஞ்சமும் குறையாது நிலைத்திருந்தது.

போர்ப்பயணம் அவனைச் செழுமைப்படுத்தியது. கால ஓட்டத்தில் பிரெஞ்சு பணியகத்தின் நிதி சேகரிப்புப் பணிக்கு முழுமையான பொறுப்பாளனாக அவன் நியமிக்கப்பட்டான். இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் கால கட்டத்தில் அவன் செயல்பாட்டுப் பரப்பு சர்வதேச ரீதியாக விஸ்தரிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளிலும் நடாத்தப்பட்டு வந்த போராட்ட நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் வழிகாட்டவும் மேற்பார்வை செய்யவும் வேண்டிய பொறுப்பு நாதனிடம் கொடுக்கப்பட்டது. அவன் சென்ற நாடெங்கும் வெற்றிகளைக் குவித்தான். அவன் கோட்பாடுகள் பேசி நிதி சேகரிப்பவன் அல்லன். யதார்த்தத்தை சொல்லி காசு கேட்பவன். விமானம் குண்டு போட்டால் எமக்கு விமான எதிர்ப்புப்படை தேவை கடலால் அழித்தால் கடல் கப்பல் வேண்டும் என நடைமுறை பிரச்சினைகளையும் தீர்வுகளையும் விளக்கி நிதி சேகரிப்பவன் நாதன்.

புலம்பெயர்ந்து வாழும் மக்கள் போர்ச்சூழலில் இருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வேறுபட்ட கலாச்சார பொருளாதார வாழ்க்கை அமைப்பில் உயிர்வாழ்வதால் போர்க்குணமும் விழிப்புணர்வும் புலம்பெயர்ந்த மண்ணில் கேள்விக்குறியாக்கப்பட்டன. சிங்கள அடக்குமுறைகளிலிருந்து தன்னினத்தின் வாழ்விடங்களை மீட்டு எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற தர்மாவேசம் புலம்பெயர்ந்த மண்ணின் பொருளாதார கலாச்சார சூழ்நிலையில் மழுங்கடிக்கப்பட்டு வந்தன. இந்தப் பிரச்சினையை கோட்பாட்டு ரீதியாக எதிர்நோக்கும் எமது இயக்க உறுப்பினர்கள் உள்ளனர். நடைமுறை உதாரணங்கள் ஊடாக மக்களுக்கு தெளிபடுத்த வேண்டுமென்று கருத்துக் கொண்டோரும் உள்ளனர்.

நாதன் நடைமுறைவாதி நடக்கும் விடயங்களை எடுத்துக் கையாளுபவன். அதற்காகப் போராடுமாறு தூண்டுவான். போராட்டத்தில் நிதியென்பது நாடித் துடிப்பு போன்றது என்று வலியுறுத்துவான். அவனது துடிப்பும் ஆர்வமும் பல இளம் உறுப்பினர்களை உற்சாகப்படுத்தியது. நாதன் பாணியில் நிதி சேகரிப்பு என்பது இன்று நாம் இளம் சமுதாயத்தினருக்கு சொல்லிவரும் முன்னுதாரணமாகும். அனைத்துலகச் செயலகத்தின் நிதிப் பொறுப்பாளராக இயக்கத்தின் தலைமைப்பீடத்தினால் நியமிக்கப்பட்ட நாதன் இயக்கத்துக்கு என்ற சுயமான பொருளாதார திட்டங்களை பல்வேறு முனைகளினுடாக முன்னெடுத்தான்.

இந்தப் பணியில் அவன் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் எதிர்கொண்ட போதும் ஈற்றில் தான் வித்திட்ட திட்டங்களிலிருந்து இயக்கத்திற்கு கனி பறித்தே கொடுத்தான். நாதன் தன் வாழ்நாள் பூராகவும் உணர்வுபூர்வமான மனிதனாகவே வாழ்ந்தான். இலகுவாக உணர்ச்சிவசப்படவும் அதே வேளை அதனை இலகுவாக மறந்து விடவும் அவனால் முடியும். எமது செயல்திட்டங்களின் வெற்றிகளை அனைவரிலும் அதிகமாக குதூகலத்துடன் கொண்டாடும் நாதன் அதே போல் தோல்விகளையும் அதிகமான வேதனையுடன் அனுட்டித்தான்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை ஆழமாக நேசித்து அவரின் கரங்களைப் பயன்படுத்துவதன் மூலமே நாங்கள் விடுதலையை வென்றெடுக்க முடியுமென அடிக்கடி இடித்துரைப்பான். அவனது சிறப்பு அவன் தன் சக உறுப்பினர் மேல் வைத்திருந்த பாசமும் அக்கறையும் ஆகும். புலம்பெயர்ந்த மண்ணில் இயக்கப்பணிக்காக எம்மோடு இணையும் பலர் பல்வேறு காரணங்களால் இடைக்காலங்களில் தம் சொந்த வாழ்விற்கு திரும்பி விடுவர். இதேவேளை இயக்கத்தில் தொடர்ந்து இயங்கும் உறுப்பினர்கள் இயக்கச் செயல்பாடுகளின் விரிவாக்கம் காரணமாக பல்வேறு பிரிவுகளுக்கும் சென்றுவிட புதிய இளம் உறுப்பினர்களை எடுத்து பயிற்றுவித்தல் வழிநடாத்துதல் என்பன எமது அமைப்பிற்கு ஒரு தொடர்ச்சியான சுமையாகவே இருந்து வந்தது. இந்தப் புதிய உறுப்பினர்களை உற்சாகப்படுத்தவும் வழிகாட்டவும் அவர்களுக்கு பல மூத்த கரங்கள் தேவைப்பட்டன. இதனை வழங்குவதற்கு நாதன் எப்போதும் தயாராகவே இருந்தான்.

நிதி சேகரிப்பு என்பது இயக்கத்தின் கடினமான அத்தியாவசியமான அதேவேளை மக்கள் மயப்படுத்தப்படும் ஒரு அரசியல்பணி. பல பேருக்கு மக்களிடம் நிதி சேகரித்தல் என்பது வெறுமனே நிதிசேகரித்தல் என்பதுடன் நின்றுவிடும். ஆனால் சிலருக்கு அந்நிதி களத்தில் நிற்கும் எமது போராளிகளின் கைகளில் தவழும் வரை பூர்த்தியடையாது. அந்தச் சிலரில் எங்களது நாதனும் ஒருவனாக இருந்தான். 12 ஆண்டுகால தன் போராட்ட வாழ்வில் அவன் கடும் உழைப்பு என்பதற்கு உதாரணமாக விளங்கினார். எடுத்த பணி முடிக்கும் வரை அவன் வேறுவிடயங்கள் பற்றிச் சிந்தித்ததே கிடையாது. அந்தப் பணி வெற்றிகரமாக பூர்த்தியடையின் அன்று அவனது இயல்பான குழந்தைத்தனம் எம்மத்தில் ஆனந்த தாண்டவமாடும்.

நாதனின் வழிகாட்டலில் இயக்கத்தின் பல்வேறு சர்வதேச திட்டங்கள் வேர்விட்ட காலத்தில் அவன் படுகொலை செய்யப்பட்டது எமது விடுதலைப் போரின் முன்னால் பாரிய சவாலாகவே அமைந்தது. அவனது செயற்பாட்டு பரப்பும் அதன் வீச்சும் எமது விடுதலைப் போரை சர்வதேச ரீதியாக உந்தித் தள்ளுகையில் அதனால் அச்சமுற்ற எதிரிகள் நடத்தி முடித்த படுகொலை நாதனை உடலால் எம்மிடமிருந்து பிரித்து உணர்வால் எம்மோடு சங்கமிக்கவைத்து விட்டது.

ஒரு விடுதலை தாகம் கொண்டு எமது இயக்கத்தின் முழு நேர உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்ட நாதன் தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில் ஒரு முழுமையான போராளியாக செழுமை பெற்று அந்தப் போர் பயணத்தில் தன்னை உடலால் இழந்து விட்டான். அவன் ஏற்றி வைத்த தியாகத் தீ புலம்பெயர்ந்து வாழும் எம் மக்களை அவர்களது எதிர்காலத்துக்கும் சுபீட்சத்துக்குமான விடுதலைப் போரில் பூரணமாக இணைத்தது. விடுதலை என்கின்ற எமது மக்களின் இலட்சியப் பயணத்தின் வெற்றிக்கு அவன் நடந்த பாதைகள் சுவடுகளாகவே ஆழப் பதிந்து நிற்கின்றன. 

No comments

Powered by Blogger.