இடைத்தேர்தல்: தலைவர்கள் வலியுறுத்தல்!

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று (அக்டோபர் 25) தீர்ப்பு வழங்கிய மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன்,“தகுதி நீக்கம் சட்ட விரோதமானது இல்லை, சபாநாயகர் முடிவில் தவறில்லை. 18 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் உத்தரவு செல்லும்” என்று தீர்ப்பளித்தார். இதனையடுத்து அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தினகரன் தரப்போ அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனையில் இறங்கியுள்ளது.
தீர்ப்பு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு....
மதிமுக பொதுச் செயலாளர், வைகோ
18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று மூன்றாவது நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார். இதில் தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்கிறார்களா என்பது குறித்து எங்களுக்கு கவலையில்லை. தற்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. 18 தொகுதிகளிலும் எந்தப் பணிகளும் நடக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத் தேர்தலை நடத்துவோம் என்பதை ஏற்க முடியாது. எனவே ஜனநாயக நலனை கருத்தில் கொண்டு 20 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் உடனே இடைத் தேர்தலை அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், திருநாவுக்கரசர்
தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றால், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் 18 தொகுதிகளும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். மேல்முறையீடு செல்வது குறித்து 18பேரும்தான் முடிவு செய்ய வேண்டும். தேர்தல் வந்தால் நல்லது என்பது எனது கருத்து. இடைத் தேர்தல் வந்தால் மக்கள் தீர்ப்பளிப்பதற்கு அது ஒரு வாய்ப்பாக அமையும். இதன் மூலம் மக்களின் மன நிலையை தெரிந்துகொள்ளலாம்.
தேமுதிக பொருளாளர், பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் நிலையான ஆட்சி நடப்பது போலவே தெரியவில்லை. இப்போது இந்தத் தீர்ப்பு வேறு தெளிவாகவே வந்துவிட்டது. அதாவது, 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தீர்ப்பு வந்திருக்கிறது.
இந்த நிலையில், அதிமுக சட்டசபையில் அறுதிப் பெரும்பான்மையை முதலில் நிரூபிக்கட்டும். எத்தனை எம்.எல்.ஏக்கள் இந்த ஆட்சிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் ஆதரவாக இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். அப்படி அறுதிப் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு, பிறகு இடைத்தேர்தலை நடத்திக்கொள்ளட்டும்.
முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம்
இன்றைய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்க்க முடியாது. 18+2 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்துவதை விட, முழு சட்டமன்றத் தேர்தலை நடத்துவதே முறையாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்
கடந்த இரண்டாண்டு காலமாக 18 தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களும், பொதுமக்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாததாலும் மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாததாலும் அவதிப்படுவதுடன் இந்நிலை ஜனநாயகத்திற்கு புறம்பானது எனவும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. எனவே, தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர், முத்தரசன்
உறுப்பினர்கள் 18 பேர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக, மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு, வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள ஆட்சி, நீடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டமாகும்.
நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தற்காலிகமாக தப்பிப் பிழைத்துள்ள அதிமுக ஆட்சி, மக்களால் மிக விரைவில் தண்டிக்கப்பட்டே தீரும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது. மக்களாட்சி மாண்புகளுக்கு ஏற்றபடி, எடப்பாடி அரசு உடனடியாக பதவி விலகி ,மக்கள் தீர்ப்பைப் பெற வேண்டும்.
விசிக தலைவர், திருமாவளவன்
18 அதிமுக எம்.எல்.ஏ-.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. சட்டரீதியாக இந்தத் தீர்ப்பு எதிர்க்கப்பட வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அந்தத் தொகுதிகள் பிரதிநிதி இல்லாமல் உள்ளன. எனவே, இனிமேலும் தாமதிக்காமல் அந்தத் தொகுதிகளில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே காலியாக உள்ள இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது. அதைப்போலவே இந்தத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தாமல் இருக்க ஆளுங்கட்சி முயற்சிக்கக்கூடும். ஆனால், அதற்கு தேர்தல் ஆணையம் துணை போகக் கூடாது தற்போது நடக்கவுள்ள ஐந்து மாநிலத் தேர்தல்களோடு இந்த இடைத்தேர்தல்களையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழக பாஜக தலைவர், தமிழிசை சவுந்தரராஜன்
தீர்ப்பால் தெளிவான முடிவு வந்திருக்கிறது. தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் மேல்முறையீடு செய்வார்களா என்பது சந்தேகம்தான். 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. இடைத் தேர்தலைக் கண்டு நாங்கள் பயந்ததில்லை.

No comments

Powered by Blogger.