நினைவுக்குள் நிறைந்து முப்பத்திதொன்று ஆண்டுகளாகிறது!

காலம் எல்லா வகையான தடங்களையும், தடையங்களையும், சுவடுகளையும் பின்னோக்கித் தள்ளியபடியே மிகமிக வேகமாக நகர்ந்துகொண்டு (ஓடிக்கொண்டு) இருக்கிறது. நினைவுப்படிவுகளின் மேல் புதிது புதிதாக ஏராளம் காட்சிகள் படியபடிய பழையவை மறைக்கப்படுதல் கால ஓட்டத்தில் சாத்தியமாகிறது. அதுதான் இயல்பானதும்கூட. ஆனாலும் எத்தனை காலம் கடந்தாலும் எத்தனை வருடங்கள் உருண்டோடி போனாலும் மன ஆழத்தில் படிந்துவிட்ட நினைவுகள் எளிதில் கரைந்துபோகாது.

இதோ இருபத்து நான்காவது வருடம் இது. அவர்கள் எம்முன் உருவங்களாக உலவாமல் விட்டு இருபத்துநான்கு ஆண்டுகளாகி விட்டன. 1987 ஒக்டோபர் 5ம் நாளில் விடுதலையின் மீதான தமது ஈடற்ற நம்பிக்கையையும் தாயகத்தின் மேலான அசைவற்ற பற்றுதலால் நஞ்சருந்தி வீரச்சவடைந்த பன்னிரண்டு வேங்கைகளின் இருபத்து நான்காவது நினைவுநாள் வந்துவிட்டது. குரூரமான ஒரு சதியின் முகம்நாண அவர்கள் தம்மை ஆகுதியாக்கி தேசத்தின் ஆன்மாவுடன் கலந்தார்கள்.

லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன், மேஜர் அப்துல்லா, கப்டன் பழனி, கப்டன் கரன், கப்டன் ரகு, கப்டன் மிரேஸ், கப்டன் நளன், லெப்.அன்பழகன், லெப்.தவக்குமார், லெப்.ரெஜினோல்ட், இரண்டாம் லெப்.ஆனந்தகுமார் என்று பன்னிரு வேங்கைகள் இந்திய வல்லாதிக்கத்தின் சதிகார முகத்திரையைக் கிழித்தபடியே வீரச்சாவடைந்து இருபத்து நான்கு ஆண்டுகளாகிவிட்டன.

இவர்களுள் குமரப்பாவும், புலேந்தியும் விடுதலைப் புலிகளின் முதுநிலைத் தளபதிகள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சியின் ஒவ்வொரு படிகளிலும் நின்று பாடுபட்டவர்கள். போ£க்களத்தின் புயல்கள். குமரப்பா: குமரப்பாவுக்கு அமைப்புக்கு வந்தபோது அவரின் சொந்தப் பெயரான இரத்தினபாலன் (பாபு) என்பதற்கு பதிலான இயக்கப் பெயராக தலைவரால் ‘குமரன்’ என்ற பெயர் வைக்கப்பட்டது.

இயல்பாகவே கலகலப்பானவர் குமரப்பா. பழகும் யாருடனும் அன்னியோன்னியமாகவும், எதிரே அமர்ந்திருப்பவரின் மனதுக்கு நெருக்கமாகவும் பழகும் திறன்மிகுந்தவர். திடகாத்திரமான உடற்கட்டு இவருக்கு இயற்கையாகவே இருந்திருந்தது. 1970களின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். இருபதுக்கும் குறைவான உறுப்பினர்களே இருந்த ஆரம்ப காலத்திலேயே அமைப்பில் தன்னை இணைத்தவர். தேடல் நிறைந்த ஒரு ஆன்மா குமரப்பா. எந்த நேரமும் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்தபடியே இருப்பார். உலக நடப்புகளை அறிவதிலும், அதனை பற்றி நண்பர்களுடன் ஆராய்வதிலும் இவருக்கு சளைப்பில்லாத ஈடுபாடு எப்போதும் இருந்து வந்திருக்கிறது.

அமைப்பில் இணைந்த பொழுதினில் அமைப்பின் பண்ணை முறைக்குள் இவரும் உள் எடுக்கப்பட்டு அந்தநேரம் இயங்கி வந்த அமைப்பின் பண்ணைகளில் ‘நம்பர் திறீ’ என்று அழைக்கப்பட்ட புளியங்குளம் பகுதியில் அமைந்திருந்த விவசாய பண்ணைக்கு அனுப்பபட்டார். அந்த 79ம் ஆண்டுப் பகுதியில் அமைப்பின் பண்ணை முறை என்பது ஒருவிதமான பரீட்சைக்களமாக ஒவ்வொருவருக்கும் இருந்திருக்கிறது. குமரப்பாவுக்கும்தான்.

சாதாரண விவசாயப் பண்ணைகள் போன்ற தோற்றத்திலேயே இவையும் இருக்கும். ஏழு, எட்டு உறுப்பினர்கள் இருப்பர்கள் ஒவ்வொரு பண்ணையிலும். அவற்றின் தினசரி நேரஅட்டவணை மிகவும் கடினமானது. அதிகாலை துயில் எழுப்பல். அதன்பிறகு சிறிது உடற்பயிற்சி. அதன்
பின்னர் விவசாய நிலத்தில் வேலைகள். களை பிடுங்குவது. டிஸ் அடிப்பது. மத்து வெட்டுவது, தண்ணி பாய்ச்சுவது என்று ஏராளம்.

மாலையில் புத்தகம் படிக்கவேணும். இப்படி ஏராளம் கட்டுப்பாடுகளுக்குள்ளாக தேறுபவர்களே அடுத்த அடுத்த பண்ணைகளுக்கு உள் எடுக்கப்படுவார்கள். குமரப்பாவுக்கு இயல்பாகவே இருந்த அன்னியோன்னியமாக பழகும் தன்மையும் நட்புடன் இணையும் பழக்கமும் அவர் இருக்கும் இடத்தை எப்போதும் கலகலப்பானதாக ஆக்கியபடியே இருந்தன. எல்லா வேலையையும் அழகாகவும் அதேநேரம் வேகமாகவும் செய்யும் திறனும் அவரிடத்தில் இருந்திருந்தது. அந்த ஆரம்பகாலப் பொழுதிலேயே செய்திகளையும், பிற போராட்ட வரலாறுகளையும் ஆவணப்படுத்துவதில் செயற்பட்டவர். அவர் இருந்த முகாமுக்கு (பண்ணை) 1979, 80களில் ஈழநாடு, தினகரன் பத்திரிகைகளில் வந்த விடுதலை சம்பந்தமான ஆக்கங்களை அழகாக கத்திரித்து ஒட்டிவைத்திருந்தவர் அவர். எந்த வரலாற்று நிகழ்வானாலும் அதனை ஆண்டு திகதி என்று மிகத்துல்லியமாக தெரிவிக்கக்கூடிய நினைவாற்றல் குமரனின் ஆளுமைகளில் முக்கியமானது.

79, 80களில் அவர் பண்ணையில் இருக்கும்போது அவர் அதிகமாக படித்தது ‘தான்பிரின், மைக்கல் கொலின்ஸ்’ என்ற இரண்டு அயர்லாந்து விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறாகும். ஆரம்ப காலங்களில் குமரப்பாவின் ஆதர்ச போராளிகளாக அவர்களே விளங்கினர். காலம் மிகவும் வேடிக்கையானதும்கூட. 80களின் ஆரம்பத்தில் அமைப்புக்குள் குழப்பவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட உடைவால் மனம் உடைந்து குமரப்பா அயர்லாந்துக்கே தொலைதொடர்பு படிக்க போக நேர்ந்தது. அயர்லாந்து சென்றதும் அவர் எழுதிய கடிதத்தில் எதை எதை அவர் தான்பிரின், மைக்கல் கொலின்ஸ் வரலாற்றில் படித்தாரோ அந்த இடங்களையே நேரடியாக தான்போய்ப் பார்த்ததாக பரவசத்துடன் தெரிவித்திருந்தார்.

அயர்லாந்து போயும் அவர் ஓயவில்லை. அங்கும் தமிழ்மாணவர் அமைப்பை உருவாக்கி விடுதலையின் தேவையைச் சொல்லியபடியே இருந்தார். எந்தநேரமும் அவருக்குள் ஒரு விடுதலைத் தீ கனன்று கொண்டே இருந்திருக்கிறது. 1983 யூலையில் தென்னிலைங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசு கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகளின்போது அயர்லாந்தில் எமது போராட்டம் பற்றியும் சிங்கள அரச பயங்கரவாதம் பற்றியும் ஒரு புகைப்படக் கண்காட்சியை குமரப்பா ஏற்படுத்தி இருந்தார். அதன் பின்னர் பாலா அண்ணையுடன் தமிழகத்துக்கு வந்த அணியில் குமரப்பாவும் இணைந்திருந்தார்.

மீண்டும் அமைப்புக்குள் இணைந்த குமரப்பா அனைத்து தளங்களிலும் தனது ஈடுபாட்டையும் ஓய்வின்றிய வேலைகளையும் செய்தவராவார். தலைவரின் பாதுகாப்பு, பயிற்சி முகாம்கள், தமிழக அரசியல் தொடர்புகள், ஊடகவியலாளர் சந்திப்புகள் என்று எந்த நேரமும் ஓய்வின்றியே அவர் 83லும் 84 ஆரம்பத்திலும் தமிழகத்தில் இயங்கினார். அதன்பின்னர் தமிழீழக் களத்தில் சென்று இறங்கி குமரப்பா தனது இறுதிநாள் வரைக்கும் எதிரிக்கும், எதிரிக்கு துணைபோகும் சக்திகளுக்கும் எதிரான சமர்கள் அனைத்திலும் பெரும்தீயாக, புயலாக நின்று களமாடி இருக்கிறார்.

அடுத்து புலேந்திரன், 80களின் ஆரம்பத்தில் திருமலையில் இருந்து சீலனுடன் வந்து அமைப்பில் இணைந்த புலேந்திரன் வீரத்துக்கு இன்னுமொரு பெயர் என்று குறிப்பிடும் அளவுக்கு அச்சம் ஏதுமில்லாத ஒரு போராளியாக போராடி இருக்கிறார். புலேந்திரன் அமைப்புக்கு வந்தபோதில்தான் அமைப்பு குழப்பவாதிகளால் உடைந்து போயிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரையும் அதன் கட்டமைப்புகளையும் தமது கைக்குள் எடுக்க முயன்று தோற்றுப்போன உமாமகேசுவரன் தலைமையிலான குழப்பவாதிகள் அமைப்பைவிட்டு ஓடியபின்னர் தேசியத் தலைவருக்கு உறுதுணையாக அவரின் வலது கரம்போல நின்று செயற்பட்டவர்களில் புலேந்திரன் மிகமுக்கியமானவர்.

விடுதலைப்புலிகள் அமைப்பு இதோ அழிந்துவிட்டது. சீர்குலைந்துவிட்டது என்று சிங்களப் பேரினவாதமும், குழப்பவாதிகளும் செய்த பிரசாரங்களை முறியடித்து எமது விடுதலை அமைப்பைத் திரும்ப ஒருங்கமைத்ததில் புலேந்திரனின் பங்கு எழுத்தில் வடிக்க முடியாதது.
மிகக்கடினமான அந்தப் பொழுதுகளில் எல்லாம் மிகமிக உறுதியுடன் நின்றவர். அதன் பின்னரும் 81, 82, 83களில் சிங்களஅரச இயந்திரத்துக்கெதிரான அனைத்து தாக்குதல்களிலும் முன்னணியில் நின்றவன் புலேந்திரன்.

இதனால் அவனுக்கு சாவகச்சேரி காவல்நிலைய தாக்குதலில் காயமும் ஏற்பட்டது. இன்றைக்கும் யப்பானிய சாமுராய் வீரர்களை பற்றிய படமோ புத்தகமோ எது படித்தாலும் புலேந்திரனின் முகம் மனதுக்குள்வருவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அப்படியான ஒரு உண்மைவீரன் அவர். அவரின் கண்களின் ஒளி என்பது விடுதலை வேள்வியை முழுக்க உள்வாங்கியதாக இருக்கும்.

விடுதலையின் போரில் உறுதி, தலைமைக்கு என்றும் உண்மை, போராளிகளுடன் பழகும்போது சகோதரன், மக்களுடன் பழகும்போது சேவகன், போராடும் பொழுதில் பெரும் ஊழித்தீ. இவற்றின் மொத்தமான வடிவம்தான் புலேந்திரன் என்ற பெயர். என்றாவது விடுதலையின் மீது குழப்பமும், அவநம்பிக்கையும் தோன்றும் பொழுதில் எல்லாம் இவர்களின் தியாகமும், ஈகமும், உறுதியும்தான் உண்மை ஒளியாக பாதை எங்கும் நிறைந்திருக்கும்.
விடுதலைப் போராட்டம் என்பது வரையறுக்கப்பட்ட நேர்ப்பாதை அல்ல. அது சந்துகளும், மேடுகளும், குறுகலான பள்ளங்களும், அதலபாதாளங்களும் நிறைந்தது. அதன்மீதான பயணத்தில் இவர்கள் எந்தக் கணத்திலும் அச்சம், குழப்பம், தயக்கம் எதுவும் இன்றி உறுதியாகப் பயணித்தார்கள். அந்த மகத்தான உறுதியே இன்றைய பொழுதிலும் எமக்கான தெளிவை அளிக்கட்டும்.

– ச.ச.முத்து
நன்றி: ஈழமுரசு / புலத்தில்

No comments

Powered by Blogger.