பொன்னாலை வீதிப் புனரமைப்பு வேலையை பொதுமக்கள் கண்காணிக்கவேண்டிய நிலை!

பொன்னாலை வீதிப் புனரமைப்பு வேலையை பொதுமக்கள் கண்காணிக்கவேண்டிய நிலை! -தொழில்நுட்ப உத்தியோகத்தர் அசமந்தம்-
வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான பொன்னாலை - மூளாய் வீதி சீரான முறையில் புனரமைக்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயத்தில் உரியவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்படி வீதிப் புனரமைப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. அப்போது பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியமையால் பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலை தொடக்கம் சின்னக்குளம் வரை 30 மீற்றர் வரையான வீதி அப்போது புனரமைக்கப்பட்டது.
இதன்போது ஏற்கனவே இருந்த வீதியைக் கிளறாமல் அதற்கு மேல் 4 இஞ்சி கல் அடுக்கப்பட்டு வேலைகள் இடம்பெற்றன. இதன்போது அங்கு சென்ற பிரதேச இளைஞர்கள் வீதியைக் கிளறாமல் புனரமைத்தால் விரைவில் பழுதடைந்துவிடும் என்பதால் கிளறிப் புனரமைக்குமாறு கூறினர்.
ஆனால், அதைக் கருத்தில் எடுக்காமல் அவர்கள் புனரமைக்க முற்பட்டபோது பிரதேச இளைஞர்கள் அதற்கு எதிர்ப்புக் காட்டினர். அவர்களுக்கு எதிராகப் பொலிஸில் முறையிடப்போவதாக ஒப்பந்தகாரர் தரப்பு அச்சுறுத்தியது.
இளைஞர்கள் அதற்கு அஞ்சாமல் நின்றமையால் வீதியில் முன்னர் அடுக்கப்பட்ட கற்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீதி கிளறப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டன.
மேலும், சீரான முறையில் தார் ஊற்றப்படாமையால் இளைஞர்கள் களத்தில் நின்று வேலையைக் கண்காணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
தொழில்நுட்ப உத்தியோகத்தர் பெயருக்கு மட்டுமே அங்கு நின்றார் எனவும் அவர் வேலைகளைக் கண்காணிக்கவில்லை எனவும் இளைஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், மிகுதி வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று (19) பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு முன்பாக வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது சீரான முறையில் தார் ஊற்றப்படாத நிலை இளைஞர்களால் அவதானிக்கப்பட்டு வேலையாட்களுக்கு கூறப்பட்டது.
மிகுதி வீதி புனரமைக்கவேண்டிய நிலையில், தாங்கள் தொடர்ந்தும் களத்தில் நின்ற கண்காணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பாக இளைஞர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த வேலைகள் நேர்த்தியாக நடைபெறுவதை வீதி அபிவிருத்தித் திணைக்களம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் வீதி வேலைகளைப் பொறுப்பெடுக்கும் ஒப்பந்தகாரர்கள் அவற்றைச் சீரான முறையில் புனரமைக்காமல் பணத்தைச் சூறையாடிச் செல்லும் சம்பவங்களால் வீதிகள் சில வருடங்களிலேயே சேதமடைகின்றன என மக்களால் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஒப்பந்தகாரர்களிடம் வேலைகளை பொறுப்பளிக்கும் திணைக்களங்களும் சபைகளும் தமது தொழில்நுட்ப உத்தியோகத்தரை களத்திற்கு அனுப்பி உரியவாறு கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.