கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு அவசரமாகக் கூடுகின்றது!

அரசியல் கைதிகளின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் நாளுக்கு நாள் அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசுத் தலைமை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடனான சந்திப்புக்கு நேரமும் ஒதுக்கவில்லை.

இந்த நிலையில் அரசியல் கைதிகள் விடயத்தில், விரைந்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்காக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நாளை மதியம் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதுடன், கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பில், அரசுத் தலைமை பாராமுகமாகச் செயற்படுவதால் இது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பை வலியுறுத்தி கொழும்பை முடக்கும் வகையில் மிகப் பெரிய போராட்டத்தை இவ்வாரம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது” என தெரிவித்துள்ளார்.

#Selvam Adaikkalanathan #Rajavarothiam # Sampanthan  #செல்வம் அடைக்கலநாதன் #தமிழ் #அரசியல் #கைதிகள்  
Powered by Blogger.