எடப்பாடி ஹேப்பி, பிஜேபி அப்செட்!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைச் சென்னையே குலுங்கும் அளவுக்கு நடத்தி முடித்திருக்கிறார் எடப்பாடி. நடந்தது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவா அல்லது எடப்பாடி விழாவா என்று சந்தேகத்தை உண்டாக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு இணையாக எடப்பாடியும் புகழப்பட்டார்.

விழாவில் கலந்துகொள்ள வந்த மக்கள் கூட்டத்தாலும் வாகனங்களாலும் சென்னை மாநகரமே திணறிவிட்டது. சுமார் ஒன்றே கால் லட்சம் மக்களும் 8,130 வாகனங்களும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காகச் சென்னைக்கு வந்ததாக உளவுத் துறை ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு சென்னையில் நடக்கும் முதல் பெரிய விழா என்பதால் கூட்டத்தைக் காட்டியே ஆக வேண்டும் என்பதில் எடப்பாடி தெளிவாக இருந்தார். அதுவும் விழாவுக்குக் கூடும் கூட்டம், மத்திய அரசைத் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் திட்டம்.

சென்னை மாநகரத்தில் மட்டும் 1,200 பேருந்துகளும் 2,000 வேன்களும் ஏற்பாடு செய்துகொடுத்தனர் போக்குவரத்துத் துறை அதிகாரிகள். மீதமுள்ள 31 மாவட்டங்களிலிருந்தும் 930 பேருந்துகள், 992 வேன்கள், 2,325 கார்கள் சென்னை நோக்கி வந்துள்ளன. சென்னையை நோக்கி வரும் சாலைகளில் உள்ள டோல் கேட் எதிலும் கட்டணம் வாங்க வேண்டாம் எனவும் வாய்மொழி உத்தரவு போடப்பட்டிருந்தது.

வாகனங்கள் ஏற்பாடு செய்திருந்தாலும், மக்கள் கூட்டத்தைப் பணம் கொடுத்துக் கூட்டவில்லை என்று சொல்கிறார்கள். ‘எடப்பாடி என்னமோ செய்யட்டும். நடக்கிற விழா எம்.ஜி.ஆருக்கான விழா. அதுக்காக நாம போய்த்தான் ஆகணும்’ என்ற உணர்வோடுதான் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் அதிமுக நிர்வாகிகளும் சென்னைக்கு பஸ் ஏறிவிட்டார்களாம்.

விழுப்புரத்திலிருந்தே நேற்று போக்குவரத்து நெரிசல் தொடங்கிவிட்டது. காவல் துறை அதிகாரிகளை எடப்பாடியே தொடர்புகொண்டு அடிக்கடி விசாரித்திருக்கிறார். ‘எல்லா ஊருல இருந்தும் ஆட்கள் வந்துட்டு இருக்காங்க. எங்கேயும் நெரிசல்ல சிக்கி நின்னுடக் கூடாது. எல்லோரும் சென்னைக்கு வந்துடணும். ஒவ்வொரு மாவட்டத்துல இருக்கிற எஸ்.பி.க்களைத் தொடர்புகொண்டு போக்குவரத்தை க்ளியர் பண்ணி அனுப்பச் சொல்லுங்க...’ என உத்தரவுகளைப் போட்டபடியே இருந்தாராம் முதல்வர்.

அதேபோல, ‘சென்னைக்குள் வரும் வாகனங்களை எங்கே நிறுத்துறாங்க... அதுக்கு சரியாக இடத்தைப் பார்த்துக்கோங்க. திரும்பிப் போறதும் சிக்கல் இல்லாமல் வெளியே போகணும். அதையும் கவனிக்கச் சொல்லுங்க.’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாராம் முதல்வர்.

இன்னொரு விஷயத்தையும் இந்த விழாவில் கவனிக்க வேண்டும்; மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி படம் மட்டுமே இருந்தது. துணை முதல்வர் பன்னீர் படம் மிஸ்ஸிங். விழா முடியும் வரை சற்று இறுக்கமான முகத்துடன்தான் பன்னீர் அமர்ந்திருந்தார். அவர் பேச்சில்தான் எடப்பாடியை அதிகமாகப் புகழவில்லை. பட்டும் படாமல் பெயரை மட்டும் சொல்லிவிட்டுப் போனார். மற்ற எல்லோருமே எடப்பாடியையும் புகழ்ந்து தள்ளினார்கள். ஜெயலலிதா பாணியில் எல்லோரும் தன்னைப் புகழப் புகழ அதை உன்னிப்பாகக் கவனித்துச் சிரித்தபடியே இருந்தார் எடப்பாடி.

வந்த கூட்டத்தைப் பார்த்து எடப்பாடி செம ஹேப்பி ஆகிவிட்டாராம். ‘நாம வாங்கன்னு அழைப்பு விடுத்து வந்த கூட்டம் இது. எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. மறுபடியும் எப்போ தேர்தல் வந்தாலும் நாம ஆட்சியைப் பிடிச்சிடுவோம். எம்.ஜி.ஆர். மேலயும் அம்மா மேலயும் வெச்ச அதே நம்பிக்கையை மக்கள் நம்ம மீதும் வெச்சிருக்காங்க...’ என்று கொங்கு மண்டல அமைச்சர்களிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் எடப்பாடி” என்று முடிந்தது மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது. “எம்.ஜி.ஆர். விழாவுக்கு வந்த கூட்டம் பிஜேபியைக் கடுப்பாக்கியிருக்கிறது. எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது என டெல்லியிலிருந்து தமிழக பிஜேபி தலைவர்களிடம் விசாரித்திருக்கிறார்கள். அவர்களோ, ‘அது எடப்பாடிக்கு வந்த கூட்டம் இல்லை. எம்.ஜி.ஆருக்கு வந்த கூட்டம்’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.