7 ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த இந்தியா திட்டம்!

கடந்த 2012ம் ஆண்டு, இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 7 ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதற்காக அசாம் சிறையில் வைக்கப்பட்டிருந்த இவர்கள் அனைவரும் மணிப்பூரில் உள்ள மியான்மர் எல்லையோர பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் நாளை மியான்மர் அதிகாரிகளிடம் ஒப்படைப்படுவார்கள் எனக் கூறியிருக்கிறார் அசாம் காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனர் பாஸ்கர் ஜோதி மஹந்தா.

இந்த நாடுகடத்தலை தடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அவசர விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என மறுத்துவிட்டார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.

இந்தியாவில் உள்ள 40,000 ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்தும் திட்டத்தை கடந்த 2017ம் ஆண்டு இந்திய அரசு முன்வைத்த போது கடுமையான கண்டனங்கள் எழுந்திருந்தன.

ஆனால் நாடுகடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்ந்து கூறி வந்த நிலையில், முதன்முறையாக 7 ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவிலிருந்து மியான்மருக்கு நாடுகடத்தப்படுகின்றனர். 
Powered by Blogger.