சேவாக்கை மிரட்டிய பந்துவீச்சாளர்!

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக அறியப்படும் விரேந்திர சேவாக் களத்தில் தன்னை மிரள வைத்த பந்துவீச்சாளர் குறித்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த இணைய நிறுவனமான யூசி பிரவுசர் நடத்திய கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றிற்குப் பதிலளித்த சேவாக் இதனைத் தெரிவித்தார். அதில் பேசிய அவர், "களத்தில் என்னைக் கலங்கடிக்க ஒரு வீரர் யார் என்றால் அது சோயப் அக்தர்தான். அவர் வீசும் பந்துகளில் எந்தப் பந்து காலைத் தாக்கும்? எது தலையை தாக்கும்? என்பதை உணர்ந்து கொள்வது மிகவும் கடினமானது. அவரது நிறைய பவுன்சர்கள் என் தலையை பதம் பார்த்திருக்கிறது. அவரது பந்துகள் எனக்குப் பயமாகவும் அதே சமயம் வேடிக்கையாகவும் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இரு உலகக் கோப்பைகளை வென்ற அனுபவம் குறித்துப் பேசிய அவர், "2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் நான் இருந்திருக்கிறேன். 2007 அணி மிகவும் இளமையானது. அப்போது நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 2011ஆம் ஆண்டிற்கு முன்பு வரை உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணி கோப்பையை வென்றதில்லை. இந்த வரிசையில் இந்தியாதான் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது" என்று கூறினார்.

அதே நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான ஷாகித் அஃப்ரிடி பேசியபோது, சர்வதேச கிரிக்கெட்டில் தான் சந்தித்த பேட்ஸ்மேன்களிலேயே மிகவும் ஆபத்தாக உணர்ந்த வீரர் விரேந்திர சேவாக்தான் என்று தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.