யாழ்.பல்கலைக்கழக இணை மருத்துவ தாதியியல் மாணவர்கள் போராட்டம்

யாழ்.பல்கலைகழக இணை மருத்துவ தாதியியல் பாடநெறிக்கான பதிவு மற்றும் அங்கீகாரத்தினை வழங்ககோரி குறித்த பிரிவு மாணவர்கள் மற்றும் மாணவர் ஒன்றியம் இணைந்து இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் பலாலி வீதியூடாக பேரணியாக வந்து யாழ் பல்கலைக்கழக பிரதான முன்றலில் நிறைவடைந்திருந்தது. பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதிகள்,

விளையாட்டு மைதானங்கள், தாதியர் பிரச்சனைகள், தனியார் பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் தீர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் முன்வைத்திருந்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், ‘யாழ்ப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஒரு அலகாக செயற்பட்டுவரும் இணை மருத்துவ பிரவில் மருந்தகவியல், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், தாதியியல் ஆகிய 3 பிரிவுகள் உள்ளன.

இதில் தாதியியல் கற்கை நெறிக்கு இதுவரை பதிவும் அங்கிகாரமும் வழங்கப்படவில்லை. இதற்கான அங்கிகாரத்தை வழங்குமாறு கடந்த 2006ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

இந்த பாடநெறிக்கான பதிவும் அங்கிகாரமும் இல்லாத காரணத்தினால் சேவைகளில் பதவிப்பிரமானம், பதவி உயர்வு, வேலைவாய்ப்பு, உயர் கல்வி கற்பதற்கான தடை போன்ற பல்வேறு பிரச்சனைக்கு நாம் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.

மேற்குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொறுப்புக்கூறவேண்டிய அமைச்சு மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிவித்து எமது கோரிக்கைகளை பலமுறை வெளிப்படுத்தி யுள்ளோம் ஆனால் இதுவரை தீர்வு கொடுக்கப்படவில்லை.

இனி எம்மை சமாளிப்பதற்கான வாக்குறுதிகள் வழங்குவதை நிறுத்தி இந்த பிரச்சனைக்குரிய தீர்வை எந்த முறையில் கையாளப்போகிறார்கள் எனவும், எந்த காலப்பகுதிக்குள் இதற்கான தீர்வை வழங்க முடியும் என்றும் எழுத்துமூல உத்தரவாதத்தை எமக்கு வழங்க வேண்டும்.

என தெரிவித்துள்ளனர். இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காதவிடத்தே தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

#jaffna #university

No comments

Powered by Blogger.