கமல், விஜய், தினகரன்: எடப்பாடியின் மும்முனைத் தாக்குதல்!

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், விஜய், தினகரன் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.


தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் 18 தொகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அமமுக, இதனைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் கோவையில் நேற்று (நவம்பர் 10) செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், “18 தொகுதிகள் மட்டுமல்ல, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தொய்வு இல்லாமல் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெற்றி சின்னமான இரட்டை இலை தற்போது துரோகிகள் கையில் உள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார். துரோகி தினகரன்தான். அதிமுகவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியவர் அவர்தான்” என்று பதிலளித்தார்.

தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும், செல்போன் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதே என்ற கேள்விக்கு, அது அரசின் பரிசீலனையில் இருக்கிறது என்று முதல்வர் பதிலளித்தார்.

தமிழகத்திலிருந்து இளைஞர்கள் வெளிமாநிலத்துக்குச் சென்று வேலை பார்க்கிறார்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “வெளிமாநிலத்தில் இருந்துதான் அதிக தொழிலாளர்கள் தமிழகத்தில் வந்து வேலை செய்து கொண்டிருக்கின்றனர். உயர் கல்வி படித்துவிட்டு வெளிநாடுகளில் வேலை செய்கிறார்களே தவிர, யாரும் அண்டை மாநிலங்களில் வேலை செய்யவில்லை” என்றார்.

எழுவர் விடுதலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இனி ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தபோது, அது மதவாதக் கட்சி என திமுகவுக்கு தெரியவில்லையா என கேள்வி எழுப்பிய முதல்வர், “முரசொலி மாறன் உடல்நிலை குன்றி ஒரு வருடம் மருத்துவமனையில் இருந்த நிலையிலும், அவருக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்து பாஜக அரசு வைத்திருந்தது. அப்போது பாஜக நல்ல கட்சி என்று கூறிய திமுகவினர் தற்போது மதவாதக் கட்சி எனக் கூறுகின்றனர்” என்று விமர்சித்துள்ளார். மக்களுக்குக் கிடைக்கக்கூடிய திட்டங்களுக்காக மத்திய அரசோடு நாங்கள் இணக்கமாக உள்ளோமே தவிர, வேறு ஒன்றும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

காலத்துக்கு ஏற்றார்போல திமுக மாறிக்கொள்ளும் என்று சுட்டிக்காட்டிய முதல்வர் பழனிசாமி, சந்திரபாபு நாயுடுவும் 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்று, நான்கரை ஆண்டு முடிந்து தேர்தல் வரும் நேரத்தில், பச்சோந்தி போன்று கட்சி மாற்றிக்கொண்டார் என்று சாடியுள்ளார்.

சர்கார் பட விவகாரத்தில் அதிமுகவினர் பேனர்களைக் கிழித்தது தொடர்பான கேள்விக்கு, அதிமுகவினர் தான் கிழித்தார்கள் என்ற போலி செய்தியைப் பரப்ப வேண்டாம் என்று திட்டவட்டமாக மறுத்த முதல்வர், பொதுமக்களும் சேர்ந்துதான் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதனால்தான் சில காட்சிகள் நீக்கப்பட்டன என்றார். எனினும் ஒரு கட்சி கொண்டுவந்த திட்டங்களைக் கொச்சைப்படுத்தும் நிலையில், தன்மானம் உள்ள எந்தக் கட்சியினரும் கொதித்துதான் எழுவார்கள் என்று கூறினார்.

விமர்சனத்தை எதிர்கொள்ளாத அரசு என்று கமல் தெரிவித்திருக்கிறாரே என்ற கேள்விக்கு, “64 வயது வரை படத்தில் நடித்து ஓய்வுபெற்ற அவர் அங்கு வாய்தா போன பிறகு அரசியலில் நடிக்க வந்துள்ளார், அவரின் நடிப்பு இங்கு எடுபடாது” என்று விமர்சித்துள்ளார்.

சர்கார் விவகாரத்தில் ரஜினி கருத்துக்குப் பதிலளித்த முதல்வர், “விலையில்லா திட்டத்தை ஊடகத்தினர் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். சில நடிகர்கள் தங்களை வளமாக்கிக் கொள்ள திட்டமிட்டு தவறான கருத்துகளைப் பரப்புகின்றனர். ரூ.300 கோடி, ரூ.500 கோடி என முதலீடு செய்து திரைப்படம் எடுப்பவர்களுக்குப் பணம் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது?. திரைப்பட இயக்குநர் முருகதாஸ் உறவினர்கள்கூட விலையில்லா திட்டத்தால் பயன் பெற்றிருப்பார்கள். ஊடகங்கள் இதனை தெளிவுபடுத்த வேண்டும். ரூ.100 திரைப்பட டிக்கெட் கட்டணங்களை ரூ.1,000க்கு விற்று ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். இதுபோன்று கூடுதலாகக் கட்டணம் வசூலித்து வருவது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று நடிகர் விஜய்யை மறைமுகமாகச் சாடினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.