நாய் இறைச்சி: அறிக்கை வெளியிடுமாறு வழக்கு!

ராஜஸ்தான் ரயிலில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட இறைச்சி குறித்த ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கடந்த 17ஆம் தேதியன்று, ஜோத்பூரிலிருந்து சென்னை எழும்பூர் வந்த ரயிலில் வைக்கப்பட்டிருந்த 2,100 கிலோ இறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது நாய்க்கறியா அல்லது கெட்டுப்போன ஆட்டிறைச்சியா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஊடகங்களில் இதுகுறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், இந்த இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென்று கோரி, இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை உணவுத் துறை அதிகாரிகள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ரயில்வே காவல் துறை பதிவு செய்த வழக்கில் விலங்குகள் கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

“பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து இறைச்சியைக் கொண்டுவருவதற்கான விதிகளை வகுக்க உத்தரவிடவேண்டும்” என்றும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை விரைவில் தொடங்குமென்று தகவல் வெளியாகியுள்ளது.

மக்களே அனுப்பலாம்!

தரம் அறிய விரும்பும் உணவுப்பொருட்களின் மாதிரியை எடுத்து மக்களே அனுப்பலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். கிண்டி உணவு பாதுகாப்புக் கூடத்திற்கு உணவு மாதிரியை அனுப்பி ஆய்வறிக்கையைப் பெறலாம் என்றும், உணவுப்பொருள்களுக்கான ரசீது பெற்று, உணவு விற்பவர் அல்லது சாட்சியிடம் கையொப்பம் பெற வேண்டும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.