கஜாவால் காணாமல் போன 6 கிராமங்கள்!

கஜா புயலின் தாக்கத்தால் ஆறு கிராமங்கள் இருந்த தடம் தெரியாமல் போய்விட்டன.


நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு, அடிக்கடி புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதியாகும். இப்பகுதியைச் சேர்ந்த ஆர்.ஜெயபால் என்னும் வேளாண் தொழிலாளி தனது வாழ்நாளில் இதுவரை நான்கு புயல்களின் தாக்கத்தை கண்டதாகக் கூறியுள்ளார். ஆனால், கஜா புயலின் கோர தாண்டவம் இவரை நிலைகுலையச் செய்துள்ளது. இதுபற்றி அவர் தி இந்து ஊடகத்திடம் பேசுகையில், தங்களிடம் இப்போது எதுவுமில்லை என்று தெரிவித்தார். “எங்களது வீடுகள் சேதமடைந்துள்ளதால், நாங்கள் இப்போது முகாம்களில் தங்கியுள்ளோம். மீன் குழம்பு வைப்பதற்கு எங்கள் குடும்பத்திடம் மாங்காய், புளி போன்றவை கூட இல்லை. எல்லாம் போய்விட்டது. எங்கள் குடும்பத்துக்குப் பழம் கொடுப்பதற்கு புதிய மாமரத்தையோ, புளியமரத்தையோ பார்ப்பதற்கு எனக்கு வயதில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

வேளாங்கண்ணியிலிருந்து தலைஞாயிறு கிராமத்துக்குப் பயணிக்கும் வழியில் மிக மோசமான நிலையைக் காண முடிகிறது. சடையன்கொட்டகம், சேரன்குளம், காரப்பிடகை, சிந்தாமணி, பளத்தன்கரை, ஏகராஜபுரம் ஆகிய கிராமங்கள் இந்த புயலினால் காணாமல்போய்விட்டன. இப்பகுதிகளில் ஒரு மரம் கூட புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவில்லை. பளத்தன்கரை கிராமம் இருந்ததற்கான தடமே தெரியவில்லை என்று ஜெயபால் தெரிவித்துள்ளார். வேதாரண்யம் தாலுகாவில், கான்கிரீட் வீடுகளைத் தவிர கஜாவால் பாதிக்கப்படாதவை என்று எதுவுமில்லை.

கஜா புயலினால் செல்போன் கோபுரங்களும் சாய்ந்துவிட்டன. மாணவர்கள் தங்களது நோட்டுப்புத்தகங்களை இழந்துவிட்டனர். பெண்களோ சாலைகளிலும், முகாம்களிலும் சமைத்து வருகின்றனர். ஆண்கள் தங்களது வீடுகளின் கூரைகளைச் சீரமைத்து வருகின்றனர். தலைஞாயிறுவைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரான சோமு இளங்கோ பேசுகையில், “கஜா புயலால் நாங்கள் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டோம். எங்களிடம் குடிசைகள் மட்டுமே இருந்த காலத்தில் நிலவிய சூழலை, இப்போடு மீண்டும் சந்தித்துவருகிறோம்” என்று கூறினார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.