சபரிமலை: 144 தடை உத்தரவு ஏன்?

சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன் என்பதற்கான விளக்கத்தை விரிவான அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு, கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, கேரளாவில் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு சபரிமலை கோயில் நடை மூன்று முறை திறக்கப்பட்டது. பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து, சில அமைப்புகள் இப்போதும் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இதனால் சபரிமலை சன்னிதானம், நிலக்கல், பம்பை ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டது.

இந்த தடை உத்தரவு தொடர்பாக, இன்று (நவம்பர் 21) கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், “சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் எதற்காக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது? கோயிலுக்கு வருவது பக்தர்களா அல்லது போராட்டக்காரர்களா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள்?” என்று கேள்வியை எழுப்பியது. இது குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு, கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும் என்றும், மாநிலத் தலைமை வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

பாஸ்போர்ட் ரத்து

இன்று, திருவனந்தபுரம் காவல் ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “சபரிமலை பிரச்சினையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கருத்துகளும், வாய்ஸ் மெசேஜ்களும் வெளியிடுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது போன்ற கருத்துகளை வெளியிடுபவர்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். அவதூறு கருத்துக்களை வெளியிடும் நபர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும். அது மட்டுமல்லாமல், அவர்கள் உடனடியாகத் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்கு பதியப்படும் என்றும், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் காவல் ஆணையர் பிரகாஷ் கூறினார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.