பிரபாகரனுக்கு வழங்கியதுபோல் ஜனாதிபதிக்கும் மஹிந்த பணம் வழங்கியுள்ளார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விலைக்கு வாங்கியதுபோல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மஹிந்த ராஜபக்ஷ விலைக்கு வாங்கியிருக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.


நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாட்டில் ஜனநாயக ஆட்சி ஒழிக்கப்பட்டு, காட்டாட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையை மாற்றியமைக்க அனைத்து சக்திகளும் ஓரணியில் திரளவேண்டும்.

அரசமைப்பின் பிரகாரம் ஆட்சிமாற்றம் இடம்பெறவில்லை. தலைகளுக்கு கோடிகளை வழங்கியே மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் கூட பேரம் பேசும் நடவடிக்கையில் இறங்கியிருந்தார். சில பேராசிரியர்களும் இதற்கு துணைபோனார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, என்னிடம் தொலைபேசி ஊடாக பேரம் பேசினார். அதை நான் அம்பலப்படுத்தினேன். ஜனாதிபதியொருவரே அரசமைப்பை அப்பட்டமாக மீறும் வகையில் செயற்படுவது பாரதூரமான செயலாகும்.

வாக்கெடுப்பை தடுப்பதற்காக பிரபாகரனுக்கு மஹிந்த அன்று நிதி வழங்கினார். அவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவர் வழங்கியிருக்கலாம் என்ற கருத்து சமூகத்தில் நிலவுகின்றது . இது குறித்து தேடிபார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

#TamilNews #News #Srilanka #Jaffn a #tamil #Tasmilarul.Net  #Palirtha ranke Banndara #Parlament

No comments

Powered by Blogger.