மைத்திரி சந்திரிக்காவின் முடிவை எடுத்தாரா?

கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நல்லாட்சியை ஏற்படுத்தியிருந்தனர்.நல்லாட்சி அரசாங்கமானது முழுமையாக நான்கு வருடங்களை கடந்திராத நிலையில், ஜனாதிபதி மைத்திரி, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது கொண்ட அதிருப்தி நிலையால் கடந்த மாதம் 26ஆம் திகதி புதிய பிரதமராக முன்னாள் ஜனாபதி மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்ததுடன், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையை கலைத்தார்.

இந்நிலையில், இதேபோன்றதான ஒரு சூழல் கடந்த காலத்திலும் இடம்பெற்றுள்ளமை இங்கு வலியுறுத்தவேண்டியது.

2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சிப்பீடத்தில் இருந்த முன்னாள் ஜனாபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அப்போதும் பிரதமராகவிருந்த ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து அகற்றி இதேபோன்றதான அரசியல் மாற்றம் ஒன்றினை செய்திருந்தார்.

இது தொடர்பில் அரச ஊடுகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அரச ஊடகம் தெரிவித்திருக்கும் செய்தியில்,

1994ஆம் ஆண்டு அமோக மக்கள் ஆதரவை பெற்று இந்த நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையுடன் நாட்டை ஆட்சி செய்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க.

எனினும் இவரது அரசியல் செல்வாக்கு 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெகுவாக ஆட்டம் காணத் தொடங்கியது.

அவர் ஜனாதிபதியாக இருக்கும்போதே, நாட்டின் பிரதமராக வரும் வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்தது.

அத்தகைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவியாக இருக்கும் சந்திரிக்காவிடம் இருக்கும் பின்னணியில், அதற்கு எதிர்மாறான கொள்கையை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருப்பதென்பது அதுவரை நாடு கண்டிராத ஒரு அதிசய நிகழ்வாக இருந்தது.

எனினும் காலப்போக்கில் இருவராலும் குறித்த ஆட்சியை ஆரம்பத்தில் இருந்ததுபோல கொண்டு செல்லமுடியாத ஒரு சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், வெளிநாட்டிற்கு சென்றிருந்த ரணில் விக்ரமசிங்க, திரும்பி வரும்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவியும், அரசாங்கத்தையும் அவர் தலைமையிலான அமைச்சரவையையும் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா கலைத்திருந்தமை வெளிச்சத்திற்கு வந்தது.

நிறைவேற்று அதிகாரத்தை கொண்ட சந்திரிக்கா தான்தோன்றித்தனமாகவும் ஜனநாயகத்திற்கு எதிராகவும், செயற்பட்டிருப்பதன் மூலம் சந்திரிக்க இந்த நாட்டை ஏகாதிபத்தியத்தை நோக்கி இட்டுச் செல்கின்றார் என்ற குற்றச்சாட்டை பதவி இழந்த பிரதமரான ரணில் விக்ரமசிங்க முன்வைத்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி வெளிவந்த சர்வதேச டைம்ஸ் சஞ்சிகைக்கு, அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா கருத்துத் தெரிவிக்கும்போது,

“என்னை பதிவியில் இருந்து துறத்துவதே ரணிலின் எண்ணம், என்னை வீழ்த்திவிட்டு ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதே அவரின் குறிக்கோள்.

இணை அரசாங்கத்தில் ஏற்பட்ட முழுமையான பிளவு காரணமாகவே, தேர்தல் ஒன்றை நடாத்த நான் பலவந்தப்படுத்தப்பட்டேன், பிரதமர் ரணில் எனக்குத் தொல்லைக்கொடுத்து என்னை பதவியில் இருந்து துறத்தவேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தார்.

அனைவரையும் பைத்தியக்காரர்களாக ஆக்கிய அவர் எல்லாம் நல்லபடியாவே நடக்கின்றது எனக்கூறிக்கொண்டு, மக்களையும் ஜனாதிபதியாகிய என்னையும் அவரது அமைச்சரவையில் இருந்த பலரையும் ஏமாற்றியே விடுதலைப்புலிகளுடன் இரகசிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டார்.

அவரின் நிர்வாகத்தின் கீழ் பாரிய ஊழல்களும் ஏற்பட்டன, அத்தோடு அவரின் இந்த செயற்பாடுகளால் நாட்டிற்கு என்ன நடக்கப்போகின்றது என்பது தொடர்பில் அவருக்கு அக்கறை இல்லை.

இதனால் இதற்கு மேலும் தொடர முடியாது என்ற நிலை வந்தவுடன் என்னிடம் இருந்த ஒரே தீர்வு மக்கள் ஆணையை கேட்பது” என தெரிவித்திருந்தார்.

இலங்கையில் அரசியல் கொடுமையானது சிலருக்கு அது விளையாட்டு, மிகவும் கீழ்த்தரமான அழுக்கான நிலையே இன்று அரசியலில் காணப்படுகின்றது.

பண்பு மிக்கவர்கள் இனிமேலும் இந்த அரசியலில் வந்து சேரமாட்டார்கள், எப்போது இந்த சாக்கடை அரசியலில் இருந்து வெளியேறப் போகின்றோம் என்ற கனவையே நான் கண்டு கொண்டிருக்கின்றேன் எனவும் அப்போது சுட்டியிருந்தார்.

இன்று ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்திருக்கும் இதே முடிவுகளையே இன்றைக்கு 14வருடங்களுக்கு முன்பாக எடுத்திருக்கும் சந்திரிக்கா தற்போது, ரணில் விக்ரமசிங்கவிற்காக முதலை கண்ணீர் வடிப்பது அவரே கூறும் சாக்கடை அரசியல் அன்றி வேறு என்ன, என குறிப்பிடப்பட்டுள்ளது.

#Chanrika Bandaranayake Kumarathuge #srilanka #ranil #Maithiri #Santhirika

No comments

Powered by Blogger.