ஆண்டுகள் ஆறு பத்தோடு நாலு அகவைகள்..!



ஆண்டுகள் ஆறு பத்தோடு 
நாலு அகவைகள் கூடி நிற்க 
அலை அடிக்கும் வல்வையிலே 
வந்துதித்த எம் ஒளிவீச்சே 
வாழ்க என்றும் நீ வாழ்க...
வல்ல மகன் நீயென்று 
வந்த பகை ஓடி போக 
வெல்லும் வரி எங்களுக்கு 
இடித்துரைத்த சூரியனே
வாழ்க நீ என்றும் வாழ்க 
வல்லமை தந்தெம்மை 
வாழ வைக்கும் எம் பலமே 
நாளிகைகள் ஒன்று சேர்த்து
நிலமகனே வாழ்த்துகிறோம்
காரிருள் நீக்கி வாழ்க அண்ணா
அண்ணா..., 
நீ எங்கே என்று 
ஒருதடவை சொல்லி விட்டு 
மறுபடியும் மறைந்திடண்ணா
எங்கள் வானேறி வரும் 
வல்லூறுகளின் குரல்களைக் கேட்க
என்னால் முடியவில்லை அண்ணா...
உன் குரல் ஒன்று இல்லையென்று
அங்கொன்றும் இங்கொன்றும் 
எங்களுக்கான மரண சாசனங்கள் 
எழுதிக்கொண்டு பல ஊழைச் 
சத்தங்கள் ஓங்கி ஒலிக்குதண்ணா
நாங்கள் தான் விடிகாலைச் 
சேவல்கள் என்று 
இரவு பகலாக கூவிக்கூவி 
உன்னையும் எங்களையும் 
விற்றுத் தொலைக்குது
ஒரு கூட்டம்...
வாய் மட்டும் போதுமென்று 
பேயாட்டம் ஆடிக் கொண்டு 
நாசமான நாக்காலே 
உன்னை போற்றுவதாய் 
வதைத்தெடுக்கும் மறுகூட்டம்...
நீ தான் வளர்த்ததுகள் என
உன் பெயரை கூறிக்கொண்டு 
வலியதை மறந்து 
கதிரையை நினைத்து 
அங்கும் இங்கும் என 
மல்லுக்கட்டும் கூட்டம் ஒன்று
நீ இட்ட புள்ளிகளில் 
இணைந்த புதுக் கோலமாக
அடையாளம் ஒன்றை வைத்துக் கொண்டு 
மார்தட்டும் 
சேர்.. நிலைக் கூட்டமொன்று
மெல்ல முடியவில்லை 
வெல்லவும் வழியில்லை 
வல்லவனே எம் அண்ணா 
வந்திங்கு சேர்ந்திடண்ணா
தேம்பி அழ வைத்து இனியும் 
மௌனம் எங்கும் வேண்டாமண்ண...
இனிய இந்த நாளில் 
எமக்கானவனே உன்னை 
வாழ்த்தி வேண்டுகிறேன் 
ஒற்றைத் தடவை உன் குரல் காட்டி 
மௌனித்து விடு நீ...
அன்புத் தம்பி இ.இ. கவிமகன்.
26.11.2018

No comments

Powered by Blogger.