'சேஸிங்கின் கில்லி’ என நிரூபித்த கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி 20யில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முந்தைய தோல்விக்கு பழிதீர்த்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டி 20 தொடர் நடந்துவருகிறது. எளிதாக வென்றிருக்கவேண்டிய முதல் போட்டியில் கடைசி நேர பேட்டிங் சொதப்பலால் 4 ரன்களில் தோற்றது இந்தியா. இரண்டாவதாக நடந்த போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி இன்று சிட்னியில் நடந்தது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா கணிசமான ரன் குவிப்பில் ஈடுபட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்களைச் சேர்த்தது. முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய குருணால் பாண்டியா, 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
165 ரன்கள் எனும் இலக்குடன் களம் கண்ட இந்திய அணியில் துவக்க வீரர்களான ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவனும் சிறப்பான துவக்கம் தந்தனர். அதிரடியாக ஆடிய தவன் 22 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 41 ரன்கள் சேர்த்தார். ரோஹித் தன் பங்கிற்கு 16 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 23 ரன்களை எடுத்தார். கே.எல்.ராகுல் 14 ரன்னில் அவுட் ஆக, ரிஷப் பந்த் டக் அவுட் ஆனார். விக்கெட்டுகள் ஒரு புறம் வீழ்ந்தாலும் விராட் கோலி மறுமுனையில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார்.
இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றியையும் பெற்றது. கடைசியில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி இந்த இலக்கை எட்ட வைத்தார் கோலி. சேஸிங்கில் தான் ஒரு கில்லி என இந்தப் போட்டியிலும் நிரூபித்துள்ளார் கோலி. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதுடன் தொடரையும் 1-1 என சமன் செய்தது இந்தியா.

No comments

Powered by Blogger.