அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விசேட குழு

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் புதிய அரசாங்கத்தினால் விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.


வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை இன்று (திங்கட்கிழமை) பார்வையிட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தற்போது சிறந்த சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது. ஏனெனில் கடந்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதியமைச்சர்களான மஸ்தான், வியாழேந்திரன், அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மற்றும் நான் உள்ளிட்ட ஒரு விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை ஒரு பொறிமுறையின் கீழ் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தக் குழு ஈடுபடும். சிறையில் இருக்கின்ற அரசியல் கைதிகள் பலதரப்பட்ட நிலைகளில் இருக்கின்றனர்.

எனவே இவர்களுக்கான விடுதலை தொடர்பான விடயங்களை முன்னெடுப்பது குறித்து நாம் விரைவில் செயற்பாடுகளில் ஈடுபடுவோம். நாம் சந்தித்த குறித்த கைதிகள் தாம் புனர்வாழ்வு பெற்று விடுதலைபெறவும் தயாராக இருப்பதாக எமக்குத் தெரிவித்தார்கள்.

எனவே நாம் நிச்சயமாக இவர்களுக்கான பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்தி அவர்களின் விடுதலை குறித்து சிறந்த தீர்வினைப் பெற்றுக் கொடுப்போம்” என அவர் மேலும் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.