27ஆம் தேதிக்குப் பிறகு ஆய்வறிக்கை: மத்தியக் குழு!

கஜா பாதிப்பு குறித்து 27ஆம் தேதிக்குப் பிறகு மத்திய அரசிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய குழு தெரிவித்துள்ளது.

கஜா புயல் பாதித்து கிட்டத்தட்ட 10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், டெல்டா மாவட்ட மக்கள் இன்னும் மீளாத்துயரில் உள்ளனர். அமைச்சர்கள் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு, நேற்று மாலை சென்னை வந்தது. இன்று காலை முதல்வர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு மத்திய குழு ஆய்வு மேற்கொள்ள டெல்டா மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் சென்றது.
மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட், மத்திய நிதித்துறை ஆலோசகர் கவுல், மத்திய வேளாண்மை துறை இயக்குநர் வத்சலா, மத்திய ஊரக வளர்ச்சித் துறை துணைச் செயலாளர் மானிக் சந்திரா பான்ட், மத்திய எரிசக்தி துறை தலைமைப் பொறியாளர் வந்தனா சிங்ஹால் ஆகியோர் அடங்கிய மத்தியக் குழுவினர் இன்று புதுக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்டனர். குளத்தூர், உட்பட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினருடன், துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனிடையே மத்திய குழுவின் ஆய்வு திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று இரவு 8.30 மணிக்குத் தஞ்சாவூரிலும், நாளைக் காலை 7 மணி முதல் மீண்டும் தஞ்சையிலும், மாலை 3.30 மணிக்குத் திருவாரூரிலும் நாளை மறுநாள் காலை7.30 மணிக்கு நாகை மற்றும் வேதாரண்யத்திலும், பிற்பகல் 2.30 மணிக்குப் புதுச்சேரி, காரைக்காலிலும் ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, ஆய்வு அறிக்கையைத் தயார் செய்து நவம்பர் 27ஆம் தேதிக்கு பிறகு மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என ஆய்வுக் குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.